Skip to content

லித்தியம் பேட்டரி – சூரிய சக்தி உபகரணங்களுக்கு வரி விலக்கு

2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில் மரபுசாரா மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் பேட்டரிகளுக்கான லித்தியம் – அயன் செல்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் மூலதனப் பொருட்களுக்கான அடிப்படை சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகளுக்கான லித்தியம் -அயன் செல்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகின்ற பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மின்சார வாகனம் மற்றும் மொபைல் போன்களுக்கு பயன்படுகிற லித்தியம் -அயன் பேட்டரிகளுக்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டது. மேலும், EV பேட்டரி உற்பத்திக்கு 35 கூடுதல் மூலதனப் பொருட்கள் மற்றும் மொபைல் போன் பேட்டரி உற்பத்திக்கு 28 கூடுதல் மூலதனப் பொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டது.

இந்த ஆண்டு சூரிய சக்தி பயன்பாடுகளுக்கு வடிவமைக்கப்பட்ட பிரதிபலிப்பு எதிர்ப்பு பண்புகளை கொண்ட சிறப்பு, குறைந்த இரும்பு, மென்மையான கண்ணாடியான சூரிய கண்ணாடி தயாரிப்பில் பயன்படுத்த சோடியம் ஆன்டிமோனேட்டை இறக்குமதி செய்ய வரிவிலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒளிமின்னழுத்த பேனல்களுக்கு சூரிய ஒளி பரிமாற்றத்தை அதிகரிக்க அல்லது கட்டிடங்களில் சூரிய கட்டுப்பாட்டை வழங்க பெரிதும் உதவும்.

மேலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் கடந்த பட்ஜெட்டில் இருந்து ரூ.20,000 அணுசக்தி திட்டத்தில் எந்த மாற்றங்களையும் அறிவிக்கவில்லை. ஆனால் அணுசக்தித் திட்டங்களுக்கு தேவையான பொருட்களின் இறக்குமதிக்கு தற்போது உள்ள அடிப்படை சுங்க வரி விலக்கை 2035 ம் ஆண்டு வரை நீட்டிக்க உள்ளதாக அறிவித்தார். மேலும், இந்த விலக்கு அனைத்து அணுமின் நிலையங்களுக்கும், அவற்றின் திறனைப் பொருட்படுத்தாமல் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அணுசக்தி திட்டத்தை பொறுத்தவரை நாட்டின் அணுசக்தி திறனை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. அந்தவகையில், 2033ம் ஆண்டுக்குள் சிறிய வகை மட்டு உலைகளை உருவாக்கி, 2047 ம் ஆண்டுக்குள் அணுசக்தி உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

கடந்த ஆண்டு அணுசக்தி உற்பத்தி துறையில் தனியார் நிறுவனங்கள் இத்தகைய திட்டங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், சுத்தமான எரிசக்தி உற்பத்தியில் நிலையான அதிகரிப்பை ஏற்படுத்தவும் அனுமதிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்த நிலையில் முக்கியமான கனிமங்களை பதப்படுத்துவதற்கு தேவையான மூலதன பொருட்களின் இறக்குமதிக்கு அடிப்படை சுங்க வரியில் விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!