Skip to content

எச்.ராஜாவை சந்தித்து நலம் விசாரித்தார் எடப்பாடி பழனிசாமி!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் சூழலில், சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் சார்பில் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் பங்கேற்றி இருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற எச்.ராஜா, விவாதம் நடைபெற்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அவர் கீழே விழுந்து விடாமல், மேடையில் இருந்தவர்கள் உடனடியாக அவரை பிடித்து பாதுகாத்தனர். அதே நிகழ்வில் பங்கேற்று இருந்த பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜாவின் உடல்நிலையை பரிசோதனை செய்து, அதிக ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்தார்.

மூளை பக்கவாதம் ஏற்பட்டி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து MRI மற்றும் CT ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், எச்.ராஜாவின் உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அவருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உடல்நிலை மெதுவாக முன்னேறி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும், அவர் மருத்துவர்களின் தொடர்ச்சியான கண்காணிப்பில் இருப்பதாகவும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடன் பேசக்கூடிய அளவில் நலமுடன் உள்ளதாகவும் அப்பல்லோ மருத்துவமனை அறிவித்து உள்ளது.

இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர், எச்.ராஜா அனுமதிக்கப்பட்டு உள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்தனர்.நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்போல்லோ மருத்துவமனை சென்று நலம் விசாரித்தார்.

error: Content is protected !!