உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த தம்பதிக்கு விஷிகா (16), பிராச்சி (14), பக்தி (12) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர். இந்த மூன்று சிறுமிகளும் நீண்ட நாட்களாக ‘கொரியன் வீடியோ கேம்’ ஒன்றிற்குத் தீவிரமாக அடிமையாகியிருந்ததாக கூறப்படுகிறது. எப்போதும் செல்போனும் கையுமாக இருந்த சிறுமிகளை கண்டு கவலையடைந்த பெற்றோர், அவர்களை கண்டித்ததோடு வீடியோ கேம் விளையாட தடையும் விதித்துள்ளனர்.
இதனால் கடும் விரக்தி அடைந்த மூன்று சகோதரிகளும், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர். சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் மூன்று சிறுமிகளும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தற்கொலைக்கு முன்பாக சிறுமிகள் எழுதி வைத்த உருக்கமான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில், “அப்பா எங்களை மன்னித்து விடுங்கள். கொரியன் கேம் இல்லாமல் எங்களால் வாழ முடியாது. அதுதான் எங்கள் வாழ்க்கை. எனவே நாங்கள் எங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் வீடியோ கேமிற்காக உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிகளின் தற்கொலைக்கு அந்த வீடியோ கேம் ஏதேனும் சவால்களை (Tasks) விதித்ததா அல்லது தூண்டுதலாக இருந்ததா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

