Skip to content

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பிரதமர் நாற்காலியை நோக்கிப் பாய்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளிலிருந்தே மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், பல்கலைக்கழக மானிய குழு (UGC) சர்ச்சை உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதன் காரணமாக அவையில் தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி நேற்று மாலை 5 மணியளவில் பதிலளித்துப் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவை தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக, இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதே வேளையில், அவைக்குள்ளும் கூச்சல் குழப்பம் நீடித்தது.

இது குறித்து பா.ஜ.க எம்.பி. மனோஜ் திவாரி தெரிவிக்கையில், “எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல பெண் எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து, திடீரென பிரதமர் அமரும் நாற்காலியை நோக்கித் திரண்டு சென்றனர். மூத்த அமைச்சர்கள் எவ்வளவோ கேட்டுக்கொண்டும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால், பிரதமரால் அவைக்குள் வர முடியாத சூழல் ஏற்பட்டது” என்றார்.

இந்த எதிர்பாராத மோதல் போக்கினால் அவையில் கடும் பதற்றம் நிலவியது. இதனையடுத்து, அவை நடவடிக்கைகள் பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

error: Content is protected !!