Skip to content

எடப்பாடி முரட்டு அடிமை – தஞ்சையில் உதயநிதி கிண்டல் பேச்சு

தஞ்சையில் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் இல்ல திருமணத்தை தமிழ்நாடு துணை முதல் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
முதலமைச்சராகப் பொறுப்பேற்று போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான ‘விடியல் பயணத் திட்டம்’. ​அதேமாதிரி தாய்மார்கள் காலையில் எழுந்து பள்ளிக்கூடத்திற்கு குழந்தைகளை அனுப்ப சிரமப்பட்ட பொழுது முதலமைச்சர் அறிவித்த திட்டம்தான் ‘முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்’. பெண்கள், மகளிர் படிக்க வேண்டும், பள்ளிக்கூடம் படித்தால் போதாது. உயர்கல்வி படிக்க வேண்டும் .அரசுப் பள்ளியில படித்து எந்தக் கல்லூரியில் போய் உயர்கல்வி சேர்ந்தாலும் உங்களுக்கு 1,000 ரூபாய் ‘புதுமைப் பெண் திட்டத்தின்’ மூலம் கொடுத்தவர்தான் நம்முடைய முதலமைச்சர் . இதற்கெல்லாம் மகுடம் சூட்டுவது போல இன்றைக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 30 லட்சம் மகளிருக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகையையும்’ நம்முடைய முதலமைச்சர் வழங்கி வருகின்றார்.
​இப்படி பல்வேறு சிறப்பான திட்டங்களைச் செய்து வருவதால் இன்றைக்கு நம்முடைய தமிழ்நாடு இந்தியாவிலேயே வளருகின்ற மாநிலங்களில் 11.19 சதவீத வளர்ச்சியோடு முதல் மாநிலமாக விளங்கி வருகின்றது. இதையெல்லாம் பொறுக்க முடியாத மத்திய பாசிச பா.ஜ.க அரசு

இன்றைக்குப் பல்வேறு வகையில நம்முடைய தமிழ்நாட்டுக்கு, நம்முடைய அரசுக்குத் தொல்லைகளைக் கொடுத்து வருகின்றது. நிதி உரிமை, மொழி உரிமைகளை பறிக்கிறார்கள்.
மீண்டும் புதிய கல்வியைக் கொண்டு வந்து இந்தியையும் சமஸ்கிருதத்தையும் நம்முடைய தமிழ்நாடு மாணவர்கள் மீது திணிக்கப் பார்க்கிறார்கள்.
​தமிழ்நாட்டுக்கான நிதி உரிமை தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது .சில நாட்களுக்கு முன்பு அறிவித்த மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு என்று ஒரு திட்டமும் இல்லை. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என பெருமையாக கூறுவார் . ஆனால் தமிழ்நாட்டுக்கு என்று ஒரு திட்டத்தைக் கூட பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனா தமிழ்நாடுங்கிற வார்த்தையே சென்ற வருட பட்ஜெட்ல கிடையாது.
​இப்படி மத்திய அரசு தமிழ்நாட்டைப் பல வகையில வஞ்சித்து வருகின்றது. பல்வேறு இடையூறுகளை தமிழ்நாட்டுக்குக் கொடுத்துக்கிட்டு வருகிறார்கள். இதையெல்லாம் கண்டிக்க வேண்டிய ஒரு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என்ன சொல்றாரு? மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டைப் படித்து முடிக்கிறதுக்கு முன்னாடியே ‘மிகச் சிறந்த பட்ஜெட்’னு சொல்றாரு . முரட்டு பக்தர்களைக் கேள்விப்பட்டிருப்பீங்க, முரட்டு அடிமைகளைப் பார்த்திருக்கீங்களா? ஒரு முரட்டு அடிமையா பா.ஜ.க.வுடைய ஒரு முரட்டு அடிமையா இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி திகழ்ந்து கொண்டிருக்கின்றார்.
​இந்த பட்ஜெட்டை வரவேற்றிருக்கிறார். இப்படி எத்தனை அடிமைகள் வந்தாலும் சரி, பழைய அடிமைகள், புதிய அடிமைகள் வந்தாலும் சரி, நிச்சயம் வருகின்ற சட்டமன்றத் தேர்தல்ல குறைந்தது 200 தொகுதிகளில் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று நம்முடைய தலைவர் மீண்டும் முதலமைச்சராக அமரப் போவது உறுதி. அதற்கான தொடக்கமாக இந்த தஞ்சாவூர் மாவட்டம் நிச்சயமாக இருக்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. கழகம் 7-வது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும். நம்முடைய தலைவர் இரண்டாவது முறையாக முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வேண்டும் என்றால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு இங்கே வந்திருக்கக்கூடிய கழக நிர்வாகிகள் களத்தில் இறங்கிப் பலமாக, கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

error: Content is protected !!