கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் இன்று சிறப்பான கட்சி இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாற்றுக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தங்கள் தாய் கழகங்களிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான வி. செந்தில் பாலாஜி அனைவரையும் சால்வை அணிவித்து வரவேற்று, திமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்டத்தின் முக்கிய திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கரூர் மாவட்டத்தில் திமுகவின் பலத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்தச் சேர்க்கை நடைபெற்றுள்ளது. கடந்த சில நாட்களாகவே மாவட்டத்தில் உள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக திமுகவில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

