Skip to content

பள்ளிக்குச் சுடிதார் அணிந்து வந்த தலைமை ஆசிரியை: கேட்டைப் பூட்டி தடுத்த காவலாளி

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் சிந்து என்பவர் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் பள்ளிக்கு வந்த அவர், அன்று சுடிதார் அணிந்து வந்திருந்தார். அப்போது பள்ளியின் நுழைவாயிலில் இருந்த காவலாளி, தலைமை ஆசிரியையை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தி கதவைப் பூட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியை, பள்ளியின் வாசலிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து அவர் காவல்துறைக்கும் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காவலாளியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, “ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வந்தால் பள்ளிக்குள் அனுமதிக்கக் கூடாது என்று பள்ளி மேலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன் காரணமாகவே கேட்டை மூடினேன்” என்று காவலாளி பதிலளித்தார்.

இருப்பினும், இந்த விவகாரம் குறித்துப் பேசிய பள்ளி மேலாளர், தான் அப்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும், தலைமை ஆசிரியையை தடுக்க சொல்லவில்லை என்றும் மறுப்பு தெரிவித்தார். போலீசாரின் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தலைமை ஆசிரியை பள்ளிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

கேரளாவில் கடந்த 2021-ஆம் ஆண்டே, ஆசிரியைகள் தங்கள் விருப்பப்படியும், வசதிப்படியும் சுடிதார் உள்ளிட்ட உடைகளை அணிந்து வரலாம் என உயர்கல்வித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. சட்டப்படி அனுமதி இருந்தும், தலைமை ஆசிரியையே உடை விவகாரத்திற்காகத் தடுக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. இந்தச் செயலில் ஈடுபட்ட காவலாளி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!