சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், வழித்தடம் 3ல் “நொய்யல்” என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து மந்தைவெளி நிலையத்தை வந்தடைந்தது. சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் என 2 வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில் இயங்குகிறது. சென்னையின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. அதாவது, மாதவரம் – சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4வது வழித்தடத்திலும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன.
மொத்தம் 118 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, பணிகள் நடைபெறுகின்றன. இதில், சுமார் 42.6 கி.மீ. சுரங்கப்பாதையில் 43 சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில், வழித்தடம் 3ல் கிரீன்வேஸ் சாலை மற்றும் மந்தைவெளி நிலையம் இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டன. இந்த சுரங்கப்பாதை பணிகளுக்காக “நொய்யல்” மற்றும் “வைகை” என்று பெயரிடப்பட்ட இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. “வைகை” சுரங்கம் தோண்டும் இயந்திரம், கிரீன்வேஸ் சாலை நிலையத்திலிருந்து சுரங்கம் தோண்டும் பணியைத் தொடங்கி, 2025ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி சுரங்கம் அமைக்கும் பணியை முடித்து மந்தைவெளி நிலையத்தை வந்தடைந்தது. ‘நொய்யல்’ சுரங்கம் தோண்டும் இயந்திரம் கிரீன்வேஸ் சாலை நிலையத்திலிருந்து 763 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி, நேற்று வெற்றிகரமாக சுரங்கம் அமைக்கும் பணியை முடித்து மந்தைவெளி நிலையத்தை வந்தடைந்தது.
இந்நிகழ்வை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர்கள் லிவிங்ஸ்டோன் எலியேசர் (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), அசோக் குமார் (வழித்தடம் மற்றும் உயர்மட்ட கட்டுமானம்), பொது மேலாளர்கள் ஆண்டோ ஜோஸ் மேனாச்சேரி (சுரங்கப்பாதை கட்டுமானம்), ரவிசந்திரன் (சுரங்கப்பாதை கட்டுமானம்), டி.ஆர்.இ ஆலோசகர் சுப்ரமணியன், லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் திட்ட இயக்குநர் லட்சுமி பிரசாத், திட்ட மேலாளர் அஹ்மத், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், லார்சன் & டூப்ரோ நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர். இது டியு-02 ஒப்பந்தத்தின் கீழ் 8வது சுரங்க இயந்திரத்தின் வெற்றியாகும். மேலும் இது, சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தின் சீரான முன்னேற்றத்தை உறுதிப்படுத்துகிறது. இந்தச் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை லார்சன் & டூப்ரோ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளுக்கு அடியில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்றது. சுரங்கம் தோண்டும் இயந்திரம் 75 கட்டிடங்களுக்கு கீழே சென்றது. இந்தக் கட்டிடங்களுக்கும், சுரங்கப்பாதைக்கும் இடையேயுள்ள மண் அடுக்கு 9 மீட்டரிலிருந்து 12 மீட்டர் வரை இருந்தது. மந்தைவெளி பகுதியில் ஏற்கனவே பல முக்கியமான அடிப்படை வசதிக் கட்டமைப்புகள் – அதாவது, கழிவுநீர் குழாய்கள், குடிநீர் குழாய்கள், மின்சார இணைப்புகள் ஆகியன இருந்தன. இதன் காரணமாக, மிகக் கவனமான திட்டமிடலும் கூடுதல் கட்டுமான காலமும் தேவைப்பட்டது.
நொய்யல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் பெரும்பாலும் வண்டல் மண் / மணல் நிறைந்த நிலப்பரப்பைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது. நொய்யல் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தில் மொத்தம் 14 முறை அதன் வெட்டும் முகப்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சுரங்கம் அமைக்கும் பணியை முடிக்க 449 நாட்கள் தேவைப்பட்டது. இவ்வாறு மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

