Skip to content

வழிதவறி அழுத 2 வயது குழந்தையை மீட்ட பெண் காவலர்

விளையாடும்போது வழிதவறிச் சென்ற 2 வயது பெண் குழந்தையை பெண் காவலர் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே 2 வயது பெண் குழந்தை நேற்று முன்தினம் தனியாக நின்று அழுது கொண்டிருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, ரோந்து பணியில் இருந்த பெண் காவலர் லிவியா குழந்தையை மீட்டு ஆசுவாசப்படுத்தினார். பின்னர், மறைமலைநகர் காவல்துறையினர் மற்றும் சைல்ட் ஹெல்ப் லைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தார். இதனிடையே, போலீசார் விசாரணை மேற்கொண்டு குழந்தையின் பெற்றோரை கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். பின்னர், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், மேற்கு வங்கத்தை சேர்ந்த தம்பதி என உறுதியானது. பெற்றோரை கண்டதும் குழந்தை மகிழ்ச்சியில் ஓடி சென்று கட்டிபிடித்து கொண்டது.

இதையடுத்து, போலீசார் குழந்தையை பாதுகாப்பாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனிடையே, குழந்தை தானாக வழிதவறிச் சென்றதால் அல்லது மர்ம நபர்கள் யாரேனும் கடத்திச் சென்றார்களா என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். காவல்துறை உங்கள் நண்பன் என்பதை வெறும் வாசகமாக மட்டுமில்லாமல் தனது செயலின் மூலம் மெய்ப்பித்து காட்டிய பெண் காவலர் லிவியாவிற்கும், அவருக்கு உறுதுணையாக இருந்த மறைமலைநகர் போலீசாருக்கும் குழந்தையின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.

error: Content is protected !!