Skip to content

கவர்னர் காரைத் துரத்திய போதை வாலிபர்கள்: கிண்டியில் அதிரடி கைது

நேற்று இரவு திருவான்மியூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு, கவர்னர் ஆர்.என். ரவி தனது காருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் சூழ கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை அருகே கவர்னரின் கார் வந்தபோது, போலீஸ் பாதுகாப்பையும் மீறி பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் திடீரென கவர்னர் காரின் அருகே மிக நெருக்கமாகச் சென்றனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்புப் பிரிவு போலீசார், வாகனத்தை நிறுத்தினால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால், உடனடியாக அடுத்த சிக்னலில் இருந்த போக்குவரத்து போலீசாருக்கு வாக்கி-டாக்கி மூலம் தகவல் கொடுத்தனர்.

கவர்னர் மாளிகையின் முதல் கேட் அருகே வந்தபோது, வாலிபர்கள் தங்கள் பைக்கின் வேகத்தைக் குறைத்தனர். அந்த சமயம் அங்கிருந்த போலீசார் இருவரையும் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்கள் கிண்டி காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர்கள் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அன்புராஜ் (22) மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த ஜீவா (22) என்பது தெரியவந்தது. இருவரும் பெருங்களத்தூரில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள். விடுமுறை நாளான நேற்று அடையாறில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு, போதை தலைக்கேறிய நிலையில் பெருங்களத்தூர் நோக்கிச் சென்றபோது, கவர்னரின் கார் அணிவகுப்பை விளையாட்டாகத் துரத்தியது அம்பலமானது. அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!