மத்தியப் பிரதேச மாநிலம் சிதி மற்றும் இந்தூர் மாவட்டங்களில் பாஜக நிர்வாகிகள் பொதுமக்களைத் தாக்கும் இரண்டு தனித்தனி வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
சிதி மாவட்டத்தின் சிஹாவால் தொகுதி பாஜக நிர்வாகி சந்தோஷ் பதக், ஒரு பெண்ணைத் தடியால் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்தப் பெண் நிலைதடுமாறி கீழே விழுந்த பிறகும், அவரைச் சற்றும் இரக்கமின்றி தடியால் தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் நடத்தி வந்த சிறிய கடையை அகற்றியது தொடர்பான முன்விரோதமே இந்த தாக்குதலுக்குக் காரணம் எனத் தெரிகிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மற்றொரு சம்பவமாக, இந்தூர் நகரின் ராவ் பகுதியில் பாஜக இளைஞர் அணி நிர்வாகி வேதாந்த் திவாரி மற்றும் அவரது ஆதரவாளர்கள், இரண்டு வாலிபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் கட்டைகளால் அந்த வாலிபர்களைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெண்ணைத் தாக்கிய விவகாரத்தில் சிதி மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்தூரில் வாலிபர்களைத் தாக்கிய வேதாந்த் திவாரி மற்றும் அவரது நண்பர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

