Skip to content

உபியில் குழந்தை தீயில் கருகி பலி- மருத்துவமனையின் அலட்சியம்.. நடிகை காட்டம்

பிரபல பாலிவுட் நடிகை ரிச்சா சதா கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தனது தாய்மைப் பயணம் மற்றும் அதன் மூலம் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்துத் தொடர்ந்து கருத்துப் பகிர்ந்து வரும் அவர், கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரசவத்திற்குப் பிந்தைய சவால்கள் குறித்துப் பதிவிட்டிருந்தார். ஒரு பெண் தாயான பிறகு உடல் மற்றும் மன ரீதியாக எதிர்கொள்ளும் அடையாள இழப்பு மற்றும் வேலைக்குத் திரும்புவதில் உள்ள சிக்கல்கள் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசியிருந்தார்.

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பிதூர் பகுதியில் இயங்கி வந்த ராஜா என்ற தனியார் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில், கடந்த 8ம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த வெப்பக் கருவியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகத் தீப்பிடித்ததில், வெப்பப் பெட்டியில் இருந்த பச்சிளம் குழந்தை ஒன்று உயிருடன் கருகித் துடிதுடிக்க உயிரிழந்தது. இந்த விபத்து குறித்துப் பெற்றோரிடம் கூறாமல் பல மணி நேரம் மருத்துவமனை ஊழியர்கள் ரகசியமாக மறைக்க முயன்றதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாகத் தலைமை மருத்துவ அதிகாரி நடத்திய விசாரணையில், அந்தப் பிரிவை நடத்தத் தகுந்த உரிமம் பெறவில்லை என்பது தெரியவந்ததை அடுத்து, அந்தப் பிரிவு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரிச்சா சதா, ‘ஒன்பது மாதங்கள் ஒரு கரு உருவாவதற்கான நீண்ட பயணத்தையும் வலியையும் கடந்து பிறக்கும் ஒரு குழந்தைக்குக் கிடைப்பது இதுதானா? இவ்வளவு அர்ப்பணிப்புடன் வளர்க்கப்பட்ட ஒரு உயிர் இப்படி இறப்பதை எனது இதயத்தை உடைக்கும் செயலாக உள்ளது’ என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!