Skip to content

பெங்களூரில் இருந்து கடத்தி வந்த 730 கிலோ குட்கா பறிமுதல்.. 2 பேர் கைது

: பெங்களூரில் இருந்து கடத்தி வந்து கடைகளுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த 730 கிலோ குட்கா ஸ்ரீபெரும்புதூர் அருகே பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தில் உள்ள தைலமர தோப்பு பகுதியில், வெளிமாநிலங்களில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தி வந்து விற்பனை செய்வதாக, சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று அதிகாலை சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், எச்சூர் பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த மினி லோடு வேனை சோதனை செய்தனர்.

அதில், மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தது தெரிந்தது. இதுதொடர்பாக எச்சூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (37), கௌதம் (25) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெங்களூரில் இருந்து குட்கா பொருள் வாங்கி வந்து சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்ய இருந்தது தெரியவந்தது.

இவர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள 730 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட சுரேஷ், கௌதம் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குட்கா கடத்தல் வழக்கில் கைதான சுரேஷ், ஏற்கெனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எச்சூர் விவசாய நிலத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 900 கிலோ குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக தேடப்பட்டு வந்த குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!