Skip to content

ஒரே நேரத்தில் 19 இசைக்கருவிகளை வாசித்து 8 வயது சிறுமி உலக சாதனை

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள்கோவில் அருகே கோவிந்தாபுரம் பகுதியில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் வில்லா குடியிருப்பில் வசிப்பவர் ஐசக் (34). இவருக்கு மனைவி ஷெரால் (32), மகள் விக்டோரியா ஐசக் (8) ஆகியோர் உள்ளனர். சிறுமி விக்டோரியாவுக்கு, 2 வயது முதலே பல்வகை இசைக்கருவிகளை வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, அவரை பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கல்லூரியில் ஐசக் சேர்த்துவிட்டுள்ளார். அங்கு கடந்த சில வருடங்களாக விக்டோரியா இசை பயின்று வருகிறார். மேலும், இவர் 6 வயதிலேயே தேசிய அளவில் நிறைய சாதனைகளை படைத்து விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு விக்டோரியா, ஒரே நேரத்தில் பியானோ, கிடார், டிரம்ஸ், வயலின் உள்பட 19 விதமான இசைக்கருவிகளை சர்வசாதாரணமாக இசைத்து, வேர்ல்டு புக் ஆஃப் ரெக்கார்ட்சில் உலக சாதனை படைத்துள்ளார். இதைத் தொடர்ந்து, நேற்று விக்டோரியாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஒரே நேரத்தில் 19 விதமான இசைக்கருவிகளை சிறுமி விக்டோரியா ஐசக் வாசித்து பாட, அதன் தாளங்களுக்கேற்ப ஒரு ரோபோ மிக அழகாக நடனமாடி அனைவரையும் ஆச்சரியத்தில் திணற வைத்தது. அச்சிறுமியின் உலக சாதனை முயற்சிக்கு குடியிருப்புவாசிகள் பாராட்டு தெரிவித்தனர்.

error: Content is protected !!