சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசாக பணியாற்றி வந்தார் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புவனேஸ்வரி (வயது 29).
இவருடைய கணவர் சிலம்பரசன்(32), ஆவடி சிறப்பு காவல்படை போலீஸ்காரராக வேலைபார்த்து வருகிறார். இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. போலீஸ் தம்பதியான இவர்கள், எழும்பூர் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர்.
திருமணத்துக்கு முன்பு புவனேஸ்வரி தனக்கு தெரிந்த ஒருவருக்கு ரூ,60 ஆயிரம் கடனாக வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த கடனை அடைப்பதற்கு அவருடைய சம்பளத்தில் இருந்து மாதந்தோறும் பணம் எடுத்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த சிலம்பரசன், அந்த கடன் பிரச்சினை தொடர்பாக மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டார்.மேலும் அவர் புவனேஸ்வரியை தாக்கியதாகவும் தெரிகிறது.
இதில் மனமுடைந்த புவனேஸ்வரி, தனது அறைக்குள் சென்று கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுபோதையில் வீட்டின் முன்பக்க அறையில் தூங்கிய சிலம்பரசன், நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது தனது மனைவி புவனேஸ்வரி, தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில் தனது மகள் புவனேஸ்வரியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் அன்புக்கரசி நேற்று எழும்பூர் போலீஸ் நிலையத் தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில் திருமணமான நாளில் இருந்தே சிலம்பரசன், எனது மகளை அடித்து கொடுமைப்படுத்தி வந்தார். சிலம்பரசன் மதுகுடித்துவிட்டு எனது மகளுடன் தகராறில் ஈடுபட்டுவந்தார். என் கண்முன்னே சில முறை எனது மகளை அடித்து துன்புறுத்தி இருக்கிறார். வரதட்சணை கேட்டும் பலமுறை அடித்துக் கொடுமைப்படுத்தினார்.
நேற்று முன்தினம் இரவு புவனேஸ்வரி செல்போன் மூலம் என்னை தொடர்பு கொண்டு ரூ.2 லட்சம் தரும்படி கூறினார். எதற்கு? என கேட்டதற்கு கணவர் நிலம் வாங்குவதற்கு கேட்டதாக அழுதுகொண்டே கூறினார். அன்று இரவு 10 மணிக்கு மேல் போலீஸ் நிலையத்தில் இருந்து புவனேஸ்வரி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனர். தூக்கில் உள்ளாடைகளுடன் தொங்கியதாகவும் தெரிவித்தனர். எனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே சிலம்பரசனை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், புவனேஸ்வரியின் கணவர் சிலம்பரசனை கைது செய்தனர்.

