கன்னியாகுமரி மாவட்டம் கழுவன்திட்டையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி பேசியதாவது: அனைத்து மதத்தினருக்கும் நன்மை செய்பவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். மத வேறுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டில் திமுக அரசு ஆட்சி செய்து வருகிறது. கல்வியும், அறிவும் தான் பெண்களுக்கு நிரந்தர அழகு. திராவிட மாடல் அரசின் மிகபெரிய சாதனை பெண்களை படிக்க வைத்தது. இந்த ஆண்டு மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இந்தியாவிலேயே உயர் கல்வியில் 46 சதவீதத்தை எட்டிய ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே. எல்லா மதங்களும் ஒன்றே. எந்த மத வழிபாட்டு முறைகளையும் கொச்சைப்படுத்த கூடாது. நாம் அனைவரும் ஓரிடத்தில் இருந்து வந்தவர்கள் தாம்.
இடையில் ஏற்படுத்தி கொண்டதுதான் மதம். மத ஒற்றுமை, சமத்துவத்தை வலியுறுத்திய ஒரே இயக்கம் திமுகதான். எல்லோருக்கும் எல்லாம். 3,000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்து இதுவரை எந்த ஆட்சியும் செய்யாத சாதனை. முதலமைச்சரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை இன்று 10 மாநிலங்கள் பின்பற்றுகின்றன. பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை இன்று 11 மாநிலங்கள், லண்டன், கனடா போன்ற நாடுகளும் பின்பற்றுகின்றன. துரோகிகளின் கூடாரமாக தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது. பாஜவுடன் கூட்டணி சேர்ந்த அதிமுக மிகவும் கேவலமான தோல்வியை சந்திக்கும். மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவதை போன்று பில்டப் காட்டி இன்று கோமாளி போல மாறிவிட்ட விசில் கூட்டம் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

