மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் தும்பிவாலி பகுதியில் நேற்று இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை மறித்து சோதனை செய்ய முயன்றனர். போலீசாரைக் கண்டதும் அந்த வாகனத்தில் இருந்த 3 பேர் தப்பியோட முயற்சித்தனர்.
உடனடியாகச் செயல்பட்ட போலீசார், அவர்கள் 3 பேரையும் விரட்டிப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடமிருந்த பைகளைச் சோதனையிட்டபோது, சர்வதேச சந்தையில் சுமார் 2.15 கோடி ரூபாய் மதிப்புள்ள கொக்கைன் மற்றும் மெபெட்ரான் ஆகிய போதைப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பிடிபட்டவர்களில் ஒருவர் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இந்தப் போதைப்பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, இதன் பின்னணியில் உள்ள கும்பல் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

