Skip to content

துபாயில் வேலை என ரூ.1.50 கோடி மோசடி: வாலிபர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், மாதவரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (31), மகாதானபுரத்தில் ‘சனேட் மேன் பவர் கன்சல்டன்சி’ என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். துபாயில் தனக்குச் சொந்தமாக நிறுவனங்கள் இருப்பதாகவும், அங்கு நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி 130-க்கும் மேற்பட்ட நபர்களிடம் சுமார் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்துள்ளார்.

பணம் கொடுத்து ஏமாந்த, பாதிக்கப்பட்டவர்கள் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தனர். மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின்படி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தலைமறைவாக இருந்த சந்தோஷை செல்போன் சிக்னல் உதவியுடன் பின்தொடர்ந்த போலீசார், அவரை மதுரையில் வைத்து 24 மணி நேரத்திற்குள் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற பெயரில் இது போன்ற மோசடிகளில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என எஸ்.பி. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்கள் அங்கீகாரம் பெறாத நிறுவனங்களை நம்பி பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது இது போன்ற புகார்கள் உள்ளவர்கள் 9498196976 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!