Skip to content

அரசுப் போக்குவரத்துத் துறையில் 8000 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வருகை.. அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்..

அரசுப் போக்குவரத்துத் துறையில் 8000 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது: ஒரு ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறையில் இரண்டு ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தி முடித்த வரலாறு ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு மட்டுமே உண்டு என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பெருமிதம்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டத்தின் சார்பில் திருச்சி, கும்பகோணம், நாகப்பட்டினம், கரூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்குடி ஆகிய 6 மண்டலங்களில் பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களான 52 மகளிர் உள்ளிட்ட 127 வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா இன்று அரியலூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பணி நியமன ஆணைகளை போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பணியாற்றி பணிக்காலத்திலேயே உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு, வேலை வழங்காமல் இருந்த சூழல் இருந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என உத்தரவிட்டதன் அடிப்படையில் தற்போது பணி ஆணை வழங்கப்பட்டு வருகிறது.

கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் மட்டும் இதுவரை 397 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 1500 பேருக்கு இதுவரை பணியானை வழங்கப்பட்டுள்ளது. நேரடி பணி நியமனம் மூலம் ஏறக்குறைய 3000 பேரை விரைவில் பணி அமர்த்த உள்ளோம். ஆனால், அந்த எண்ணிக்கையில் ஏறக்குறைய 1500 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனம் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு எஸ்மா, டெஸ்மா சட்டங்களை சந்தித்த இந்த துறை ஊழியர்களிடம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என எனக்கு பலரும் சொல்லினர்: ஆனால் கடந்த நான்கு ஆண்டு காலத்தில் போக்குவரத்து துறை ஊழியர்கள்என்னிடம் ஒரே குடும்பம் எனும் உணர்வோடு பணியாற்றி சிறப்பான துறையாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு மூன்றாண்டுக்கும் ஒருமுறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடக்கும். கடந்த அதிமுக ஆட்சியில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை நடத்தாமல் விட்டுச் சென்றனர். பே மேட்ரிக்ஸ் முறையை அதிமுக அரசு கைவிட்டது. அதை வழங்க வேண்டும் என்றால் மாதம் 40 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்று சூழல் இருந்தது. நிதிச் சுமை, கொரோனா காலத்தில் எந்த இயக்கமும் இல்லாமல் போக்குவரத்து துறைக்கு ஏற்பட்ட நெருக்கடி, ஏற்கனவே போக்குவரத்து துறையில் உள்ள கடன் சுமை ஆகியவற்றையெல்லாம் தாண்டி மாதம் ரூ.40 கோடியை கொடுப்பது இயலாத காரியம் என நிதித்துறையில் தெரிவித்தனர்.

உடனடியாக நிதித்துறை அலுவலர்களை அழைத்து போக்குவரத்து துறை என்பது சேவை துறை என்பதால், நிதியை விடுவிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். பின்னர் பே மேட்ரிக்ஸ் முறையை கொண்டு வந்து ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை சமூகமாக முடிக்கப்பட்டு, ஐந்து சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளதென்பது இதுவரை எந்த அரசும் செய்யாத மிகப்பெரிய சாதனையாகும்.

இன்று போக்குவரத்து துறை மிக சிறப்பான நிலைக்கு வந்துள்ளது. போக்குவரத்து துறையில் 8000 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் 1208 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 116 புதிய வழித்தட பேருந்துகள் 1632 வழித்தடங்களில் நீட்டிப்பு செய்யப்பட்ட பேருந்துகள், 400 பேருந்துகளில் கூண்டுகள் மாற்றப்பட்டு புதிய வடிவமைப்புடன் தற்பொழுது மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

போக்குவரத்து துறையில் பணி ஓய்வு பெறுகின்ற ஊழியர்கள் மற்ற துறைகளைப் போல பண பலன்களை அடைய முடியாத சூழல் இருந்தது. ஒருபுறம் துறை சந்தித்து வரும் நஷ்டம், இன்னொரு புறம் கடந்த ஆட்சியில் சரியாக கையாறாகாத சூழல் ஆகியவற்றால் உரிய நேரத்தில் பணப்பலன்கள் வழங்க முடியாத நிலை இருந்தது. நம்முடைய முதலமைச்சர் பொறுப்பேற்ற பின்னர் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக பணப்பலன்கள் விடுவிக்கப்பட்டு வந்தது. தற்பொழுது வரும் மார்ச் மாதம் ஓய்வு பெறுபவர்களுக்கும் சேர்த்து ரூ.2046 கோடியே 46 லட்சம் ரூபாய்க்கான பண பலன்கள் வழங்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்து துறை வரலாற்றிலே ஒரு மகத்தான சாதனை.

நஷ்டத்தில் இயங்கும் ஒரு துறைக்கு இவ்வளவு நிதியை ஒதுக்குகிறார்கள் எனில் பணியாற்றும் ஊழியர்கள் மனநிறையோடு பணியாற்ற வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான். இந்த அறிவிப்பு எனக்கும் மிகப்பெரிய மனநிறைவை தந்துள்ளது. போக்குவரத்து துறை ஒரு சுமூகமான நிலைக்கு இன்று வந்துள்ளது. இந்த சாதனை என்பது நம்முடைய முதலமைச்சரின் சாதனைகளில் ஒரு மகுடம் வைத்தது போன்ற சாதனையாக திகழ்கிறது எனப் பேசினார்.

error: Content is protected !!