Skip to content

வருமானத்திற்கு மேல் சொத்து குவிப்பு: லஞ்ச ஒழிப்புத்துறை பிடியில் பெண் இன்ஸ்பெக்டர்

தமிழக அரசு ஊழியர்களாக பணிபுரிபவர்கள் தங்களது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை சேர்த்திருந்தால் அதனை கண்டுபிடித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள்.
அந்த வகையில், சென்னையில் திருமங்கலம் வெல்கம் காலனியில் வசித்து வரும் விபசார தடுப்பு பிரிவு பெண் இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமியின் வீட்டில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனிடையே இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தரப்பில், தன் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் வழக்கு போட்டு சோதனை நடத்தப்படுவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1999-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந்தேதி சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்த ராஜலட்சுமி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு, போக்குவரத்து புலனாய்வு, விபசார தடுப்பு பிரிவு போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பணிபுரிந்தபோது, தனது பதவியை தவறாக பயன்படுத்தி, 1.6.2017 முதல் 30.6.2025 வரையிலான காலகட்டத்தில் தனது பெயரிலும், தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கி குவித்துள்ளார்.
இதற்கிடையில், இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரைப் பற்றி ரகசிய விசாரணை நடத்தியுள்ளனர். அதன்படி, அவரது சட்டவிரோத வருவாயை கணக்கிடுவதற்காக 2017 முதல் 2025 வரையிலான காலகட்டம் பரிசீலனைக் காலமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த காலகட்டத்தில் இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமியின் வருமானம் 1 கோடியே 45 லட்சத்து 80 ஆயிரமாக இருந்துள்ளது. அதே சமயம், அவரது செலவினங்கள் 2 கோடியே 25 லட்சத்து 98 ஆயிரமாக இருந்திருக்கிறது.

அதுமட்டுமின்றி, கடந்த 2017-ம் ஆண்டில் ராஜலட்சுமியின் சொத்து மதிப்பு 3 லட்சத்து 64 ஆயிரத்து 310 ரூபாயாக இருந்த நிலையில், 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவரது சொத்து மதிப்பு 4 கோடியே 62 லட்சத்து 6 ஆயிரத்து 529 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், சேமிப்பாக அவர் சுமார் 80 லட்சம் ரூபாய் வைத்திருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மொத்தமாக இந்த காலகட்டத்தில் ராஜலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பை ஆய்வு செய்தபோது 5 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் குவிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறையினரின் கணக்கீட்டின்படி, ராஜலட்சுமி தனது அதிகாரப்பூர்வ வருமானத்தை விட சுமார் 372 சதவீதம் அதிகமாக சொத்துகளை குவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கேட்டபோது, இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி மீதான வழக்கு விசாரணை கோர்ட்டில் விரைவாக நடத்தப்படும் என்றும், இதன் முடிவில்தான் அவர் மீதான அடுத்தகட்ட நடவடிக்கைகள் பாய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!