திருப்பூர் 15 வேலம்பாளையம் ஊருடையம்மன், விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி 15 வேலம்பாளையம் மஸ்ஜிதே இக்லாஸ் பள்ளிவாசல் மற்றும் மதரசா ஜமாத்தார்கள் சார்பில் ஊருடையம்மன் கோவிலுக்கு நேற்று மாலை சீர்வரிசைகள் வழங்கப்பட்டது.
பள்ளிவாசலின் தலைவர் அப்துல் சமது தலைமையில், பள்ளிவாசல் செயலாளர் முகமது ரபீக், பொருளாளர் சித்தீக் உள்பட 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அத்துடன், 11 சில்வர் தட்டுகளில் சீர்வரிசையாக மாலைகள், பழவகைகள், தேங்காய், இனிப்பு வகைகள் கொண்டு வந்தனர்.
வெற்றிலை, சந்தனத்தை 1-வது மண்டல தலைவர் உமாமகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம் மற்றும் கோவில் கமிட்டி நிர்வாகிகளிடம் வழங்கினார்கள். இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் இஸ்லாமியர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது கோவில் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமியர்கள் கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் சிவாச்சாரியார்கள், இஸ்லாமியர்கள், கோவில் கமிட்டி நிர்வாகிகள், பக்தர்கள், ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர். திருப்பூரில் கும்பாபிஷேக விழாவையொட்டி கோவிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசைகள் வழங்கிய நிகழ்ச்சி சமூக மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்ததுடன், மக்களிடையே நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

