திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பையூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (40). கார் டிரைவர். இவரது மனைவி ஆஷா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதே ஊரை சேர்ந்த வெங்கடேசன். அவரது மனைவி கவிதா. அவர்களுக்கு சாய்க ரன் (14) என்ற மகன் உள்ளான்.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேசன் திடீரென இறந்து விட்டார். அவர் இறந்தபின் அவரது மனைவி கவிதாவை வினோத்குமார் 2-வது திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து அவர் 2 மனைவிகளுடன் தனித்தனியாக குடும்பம் நடத்தி வந்தார். வினோத்குமாருக்கு கவிதா மூலம் திலீப் (7)என்ற மகன் உள்ளான்.
கவிதா அடிக்கடி செல்போனில் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இது குறித்து அறிந்த வினோத்குமார் மனைவி கவிதாவை கண்டித்துள்ளார். பலமுறை கண்டித்தும் கவிதா அதனை பொருட்படுத்தவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவும் கவிதா செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்துள்ளார்.
இதனைப் பார்த்த வினோத்குமார் ஆத்திரம் அடைந்து கவிதாவை கண்டித்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. ஆத்திரம் அடைந்த வினோத்குமார் கவிதாவின் முகத்தில் பலமாக குத்தியதோடு, தலையை சுவரில் மோதி சரமாரியாக தாக்கி உள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த கவிதா அலறியபடி சாய்ந்தார். சற்று நேரத்தில் அவர் பேச்சு மூச்சின்றி கிடந்தார். அவரை உடனடியாக வினோத்குமார் ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று விபத்தில் கவிதா படுகாயம் அடைந்ததாக கூறி சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் முள்ளிப்பட்டில் வசிக்கும் கவிதாவின் தாயார் பானுமதிக்கு தகவல் தெரிவித்தார்.
பானுமதி அரசு மருத்துவமனைக்கு பதற்றத்துடன் வந்தபோது வினோத்குமார் தலைமறைவாகிவிட்டார். அதற்குள் கவிதாவும் பரிதாபமாக இறந்தார். இது சம்பந்தமாக ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில் விநாயகம் மற்றும் போலீசார் அங்கு வந்து கவிதாவின் உடலை கைப்பற்றினர்.
இது குறித்து பானுமதி கொடுத்த புகாரின் பேரில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் சண்முகம் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த வினோத்குமாரை தேடி பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது கவிதாவை கொலை செய்தது தெரியவந்தது.
பின்னர் போலீசார் கவிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து வினோத்குமாரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பையூர் பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

