தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆதிபராசக்தி நகர் பகுதியில் பாதாள சாக்கடை குழாய்க்குள் இறங்கி மோட்டாரை புகைப்படம் எடுக்கும் போது விஷவாயு தாக்கியதில் நெல்லை மாவட்டம் பருத்தி குளம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற தூய்மை பணியாளர் பரிதாபமாக பலியானார்.தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆதிபராசக்தி நகர் பகுதியில் அந்தப் பகுதியில் உள்ள கழிவுநீரை பம்ப் செய்து வெளியேற்றக் கூடிய பாதாள சாக்கடை உள்ளது இந்த பாதாள சாக்கடை குழாய்க்குள் கழிவு நீரை வெளியேற்ற மோட்டர் பம்ப் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மாலை இந்த பாதாள சாக்கடை குழாய்க்குள் உள்ள மோட்டார் பம்பை படம் எடுத்து அனுப்ப மாநகராட்சி ஒப்பந்த அதிகாரிகள் அந்தப் பகுதியைச் சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து தூய்மை பணியாளர் சங்கர் என்பவர் முக கவசம் அணிந்தபடி பாதாள சாக்கடை குழாய்க்குள் அமைந்துள்ள மோட்டாரை படம் எடுத்துள்ளார். பின்னர் கீழே இருந்தபடி செல்போனை மற்றொரு தூய்மை பணியாளரான நெல்லை மாவட்டம் பருத்தி குளம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரிடம் செல்போனை கொடுத்துள்ளார். அப்போது ராஜா பாதாள சாக்கடைக்கு உள்ளே கீழே குனிந்த படி சங்கரிடம் செல்போன் வாங்க முயற்சி செய்துள்ளார். அப்போது விஷவாயு நேரடியாக ராஜாவின் முகத்தில் தாக்கியதில் அவர் அப்படியே மயங்கி பாதாள சாக்கடைக்குள் சரிந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சங்கர் ராஜாவை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது சங்கருக்கும் மயக்கம் வர மேலே இருந்த சிலர் சங்கரை உடனடியாக மேலே தூக்கி உள்ளனர். இதைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் வந்து மயங்கிய நிலையில் இருந்த சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் மீட்கப்பட்டார். இந்த நிலையில் பாதாள சாக்கடைக்குள் சிக்கிய ராஜாவை தகவல் கிடைத்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி பாதாள சாக்கடைக்குள் சிக்கி இறந்த நிலையில் இருந்த ராஜாவின் உடலை மீட்டனர் ராஜாவின் உடலை மீட்ட தீயணைப்புத் துறையினர் அவருக்கு முதலுதவி அளித்து பார்த்தனர். ஆனால் அவர் விஷவாயு தாக்கி சாக்கடை நீர் உள்ளே விழுந்ததால் இறந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து இறந்த தூய்மை பணியாளர் ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது இந்த சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

