ஆன்மீக பூமியான திருவண்ணாமலையில், நள்ளிரவில் காம்பவுண்ட் சுவரேறி குதிக்கும் ‘அரை நிர்வாண’ முகமூடி கொள்ளையர்களின் நடமாட்டம் உள்ளூர் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 27-ந்தேதி நள்ளிரவு, திருவண்ணாமலை கிரிவலப்பாதை விசிறி சாமியார் ஆசிரமம் பகுதியில் உள்ள சொர்ண பூமி நகர் 7-வது தெருவில் இந்த துணிகர சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு குடியிருப்பு வீட்டிற்குள், அடையாளம் தெரியாத நபர்கள் முகமூடி அணிந்து, அரை நிர்வாண கோலத்தில் நுழைந்துள்ளனர். வீட்டின் பூட்டை உடைத்து தங்களது கைவரிசையை காட்டிய அந்த கும்பல், பின்னர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடியுள்ளது.
கொள்ளையர்கள் திருடிவிட்டு தப்பி ஓடும் விசித்திரமான மற்றும் பயமுறுத்தும் காட்சிகள், அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சிசிடிவி கேமராவில் துல்லியமாக பதிவாகியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு, திருவண்ணாமலை தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். உள்ளூர் கொள்ளையர்களா அல்லது வெளிமாநில கொள்ளை கும்பலா என்ற கோணத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
தொடர்ந்து நடக்கும் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் திருவண்ணாமலையின் அனைத்து பகுதிகளிலும் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
