Skip to content

அன்புமணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி- வழக்கை திரும்ப பெற்ற ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள் காரணமாக, பாமக தற்போது இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகிற தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாமகவுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்கான கடிதத்தை யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் ‘பாமக தலைவர்’ என குறிப்பிட்டு அக்கட்சியின் தி.நகர் அலுவலகத்துக்கு அனுப்பியது.

இதை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண இருதரப்புக்கும் உத்தரவிட்டது.

இதனிடையே பாமகவின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக் கோரியும், கட்சியின் தலைவராக தம்மை அறிவிக்கக் கோரியும் ராமதாஸ் சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவானது நீதிபதி எம்.தர்மபிரபு முன்பு பிப்ரவரி 25ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, ராமதாஸ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், “பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவின்படி, பாமகவின் தலைவராக ராமதாஸ் தான் உள்ளார். எனவே அன்புமணி ராமதாஸ் தலைவர் என்று கூற தடை விதிக்க வேண்டும். மேலும், மாம்பழம் சின்னத்தையும், பாமக பெயர் மற்றும் கொடியை பயன்படுத்தவும் அன்புமணிக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ராமதாஸ் தரப்பு கோரிக்கைக்கு பதிலளிக்க, அன்புமணி தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. எனவே இந்த வழக்கில் அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை மார்ச் 9 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கானது நிலுவையில் உள்ளது. உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை திரும்ப பெற ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம், வழக்கு திரும்ப பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

error: Content is protected !!