Skip to content

இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா முக்கிய தளபதி கொல்லப்பட்டார்

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்பட பலர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
அதேவேளை, லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவுக்கு ஈரான் ஆயுதம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. ஹிஸ்புல்லா ஆயுதக்குழு லெபனானில் இருந்தவாறு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இஸ்ரேல் – ஈரான் மோதலை தொடர்ந்து ஈரானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்று முதல் ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஹிஸ்புல்லா தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. அதன்படி, லெபனானின் பெரூட்டில் இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் உளவுத்துறை தளபதி ஹசன் மெக்லிட் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!