Skip to content

கரூரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்: 73 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 73வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் வடக்கு நகர பொறுப்பாளர் பாண்டியன் ஏற்பாட்டில் முதல்வரின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு 73 கிலோ எடையுடைய கேக் தயாரிக்கப்பட்டு, அதில் முதல்வரின் புகைப்படத்துடன் திமுக அரசின் பல்வேறு சாதனை திட்டங்கள் படங்களாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு கேக் வெட்டி நிர்வாகிகள் மற்றும் கட்சியினருடன் கொண்டாடினார். அதனைத் தொடர்ந்து கயிறு இழுக்கும் போட்டியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய செந்தில் பாலாஜி, “நமது தலைவரின் 73வது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். அவருக்கு நாம் அளிக்கும் உண்மையான பிறந்தநாள் பரிசு என்பது 2026 சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டத்தின் நான்கு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வதே. அதிலும் கரூர் தொகுதி மற்றும் வெங்கமேடு பகுதியில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறும் வகையில் பணியாற்ற வேண்டும்,” என தெரிவித்தார். நிகழ்ச்சியில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

error: Content is protected !!