கோவை மாநகராட்சி மாமன்றத்தில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில், பெரியார் சிலை அமைத்தல் உள்ளிட்ட 67 தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது, எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், மாமன்ற அவசரக் கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் நூலகம் மற்றும் அறிவுசார் மைய வளாகத்தில் பெரியார் சிலை அமைக்க முன் அனுமதி, பூங்கா பராமரிப்பு, ஆரம்ப சுகாதார நிலை கூடுதல் கட்டிடம் உள்ளிட்ட 67 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே இரண்டாவது முறையாக மாமன்ற அவசர கூட்டத்தை கூட்டியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் மேயர் ரங்கநாயகியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் இருவரும் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து தொடர்ந்து கூட்டத்தை நடத்தவிடாமல் பிரச்சனையில் ஈடுபடும் அதிமுக திமுக கவுன்சிலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேயரிடம் கோரிக்கை வைத்தனர். அப்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற குழு தலைவர் ராமமூர்த்தி கடந்த முறை அதிமுக மேயர் இருந்த போது தேர்தல் நேரத்தில் பணிகளை விரைந்து முடிக்க அவசர கூட்டம் நடத்தினர், அப்போது நான் கேட்ட போது பணிகளை விரைந்து முடிக்க தான் இந்த நடவடிக்கை என விளக்கமளித்தனர். ஆனால் இப்போது வேண்டுமென்றே கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து வெளியே செல்கின்றனர், இதனை கண்டிக்கிறோம் என்றார்.

