ஒன்றிய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளை மறுநாள் தொடங்குகிறது. அதேநேரம் சபாநாயகர் ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கட்சிகள் கொண்டுவந்துள்ளதால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பிப். 1ம் தேதி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் மீதான முதல் கட்ட கூட்டத் தொடர் பிப். 13ம் தேதி வரை நடைபெற்றது. அப்போது, பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. குறிப்பாக, இந்திய – சீன எல்லை பிரச்னை குறித்த முன்னாள் ராணுவ தளபதி நரவணேவின் புத்தக விவகாரம், விலைவாசி உயர்வு மற்றும் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரங்களால் சபையில் கடும் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இதனால் முதல் கட்ட கூட்டத்தொடர் எவ்வித முக்கிய விவாதங்களும் இன்றி ஒத்திவைக்கப்பட்டது.
பல்வேறு அமைச்சகங்களின் மானியக் கோரிக்கைகளை நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் ஆய்வு செய்வதற்காக பிப். 14ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை 3 வாரங்கள் விடுமுறை விடப்பட்டது. தற்போது இந்த விடுமுறை முடிவடைந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளை மறுநாள் (மார்ச் 9) மீண்டும் தொடங்க உள்ளது. அன்று முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத் தொடரில் மொத்தம் 17 நாட்கள் சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதற்கிடையே வரும் 16ம் தேதி 10 மாநிலங்களில் உள்ள 37 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரின் போது, பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மானியக் கோரிக்கைகள் குறித்து விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
குறிப்பாக, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரி விதிப்பு தொடர்பான முன்மொழிவுகளை உள்ளடக்கிய நிதி மசோதா 2026-ஐ நிறைவேற்றுவது இந்த கூட்டத் தொடரின் மிக முக்கியமான பணியாகக் கருதப்படுகிறது. இந்தக் கூட்டத்தொடர் அரசியல் ரீதியாக மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், முந்தைய கூட்டத் தொடரில் சபாநாயகர் ஓம் பிர்லா, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்களை பேச அனுமதிக்கவில்லை.
பொதுப் பிரச்னைகளை எழுப்பிய 8 எதிர்க்கட்சி எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தது மற்றும் பெண் எம்.பி.க்களுக்கு எதிராக தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியது போன்ற செயல்களில் ஓம் பிர்லா ஈடுபட்டார். அவர் நடுநிலையோடு செயல்படாமல் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அதனால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ‘இந்தியா’ கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த 118 எம்.பி.க்கள் இந்த நோட்டீஸில் கையெழுத்திட்டுள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்தத் தீர்மானத்தில் இதுவரை கையெழுத்திடவில்லை.
சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் நாளை மறுநாள் (மார்ச் 9) மக்களவையில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இந்தத் தீர்மானத்தை காங்கிரஸ் எம்.பி.க்களான முகமது ஜாவத், கே.சுரேஷ் மற்றும் மல்லு ரவி ஆகியோர் அதிகாரப்பூர்வமாக முன்மொழிய உள்ளனர். இந்தத் தீர்மானம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடக்கும் போது அனைத்து உறுப்பினர்களும் அவையில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்கள் எம்.பி.க்களுக்கு ‘கொறடா’ உத்தரவை பிறப்பித்துள்ளன. அதில் மார்ச் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை உறுப்பினர்கள் அவையில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசியல் சாசன விதி 94(சி) மற்றும் 96ன் படி இந்தத் தீர்மானம் விவாதத்திற்கு வரும்போது சபாநாயகர் ஓம் பிர்லா அவையை நடத்த முடியாது. அவர் ஆளும் கட்சி உறுப்பினர்கள் வரிசையில் அமர்வார். விவாதத்தின் போது தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கவும், முதல் சுற்றில் வாக்களிக்கவும் அவருக்கு உரிமை உள்ளது. இந்தத் தீர்மானம் வெற்றி பெற அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் என்று நாடாளுமன்ற விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளும் ஒன்றிய பாஜக கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால்,
சபாநாயகருக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கும் என்றாலும், எதிர்கட்சிகள் தங்களது அரசியல் நிலைபாட்டிற்காக இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளன. நாடாளுமன்ற வரலாற்றில் சபாநாயகர் மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வருவது மிகவும் அரிதான நிகழ்வாகும். இதற்கு முன்பு ஜி.வி.மாவலங்கர் (1954ம் ஆண்டு), ஹுகம் சிங் (1966ம் ஆண்டு) மற்றும் பல்ராம் ஜாக்கர் (1987ம் ஆண்டு) ஆகிய மூன்று சபாநாயகர்கள் மட்டுமே இத்தகைய தீர்மானங்களை எதிர்கொண்டனர். அந்த சமயங்களில் ஆளும் கட்சிகள் பெரும்பான்மையுடன் இருந்ததால் அந்தத் தீர்மானங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்கட்சிகளின் போர்க்கொடி
நாளை மறுநாள் தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கூட்டத்தில், இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பவுள்ளன. மேலும் மேற்கு ஆசியாவில் நிலவும் ஈரான் – இஸ்ரேல் போர் குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்பிக்கள் நோட்டீஸ் அளித்துள்ளனர். அங்குள்ள லட்சக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். மேலும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, காஸ் விலை உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல பிரச்னைகளை கிளப்ப எதிர்கட்சிகள் தயாராக உள்ளன. இதுதவிர, கடந்த அமர்வில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்பி-க்களின் தடையை நீக்க வேண்டும் என்றும், 100 நாள் வேலை திட்டத்திற்கு பதிலாக கொண்டு வரப்பட்டுள்ள புதிய திட்டத்தால் கிராமப்புற வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கவுள்ளன.

