விழுப்புரம் அருகே உள்ள ஒரு சவுக்குத்தோப்பில் கடந்த 7-ம் தேதி ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடலில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்ததால், இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
கொலையாளிகளைக் கண்டறிய போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், கடந்த 3-ம் தேதி இரவு கண்டாச்சிபுரம் பஸ் நிலையத்தில் இறங்கிய நபர் ஒருவர், வழி தெரியாமல் நீண்ட நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தது பதிவாகியிருந்தது.
அந்த செல்போன் எண்களை வைத்து சைபர் கிரைம் உதவியுடன் விசாரணை நடத்தியபோது, கொல்லப்பட்டவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் ஜெயக்குமார் (40) என்பது உறுதி செய்யப்பட்டது.
விசாரணையில் சென்னை முகப்பேரைச் சேர்ந்த துணை நடிகை பூஜா (20) என்பவருடன் ஜெயக்குமாருக்குத் தொடர்பு இருந்தது தெரியவந்தது. போலீசார் பூஜாவைப் பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின:
இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான பூஜாவிடம், ஜெயக்குமார் தனது காதலைத் தெரிவித்துத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.தனக்கு ஏற்கனவே ‘தேவா’ என்ற காதலன் இருப்பதாக பூஜா கூறியும், ஜெயக்குமார் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.இந்தத் தொல்லையைத் தீர்க்க பூஜா தனது காதலன் தேவாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து, ஜெயக்குமாரை ஆள்நடமாட்டமில்லாத இடத்திற்கு வரவழைத்துத் தீர்த்துக்கட்ட அவர்கள் திட்டமிட்டனர்.
பூஜா கொடுத்த தகவலின் அடிப்படையில், அவரது காதலன் தேவா (24), நண்பர் அய்யப்பன் (24), தோழி துர்கா மற்றும் இக்கொலைக்கு உடந்தையாக இருந்த இரு சிறுவர்கள் உட்பட மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும் ஜெயக்குமாரை சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்ல உதவிய 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்களையும் போலீசார் பிடித்தனர்.
“காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல், ஒரு குறும்பட இயக்குநரின் உயிரைப் பறித்ததோடு, வளர்ந்து வரும் துணை நடிகை உட்பட பல இளைஞர்களின் எதிர்காலத்தையும் சிறைக்கதவுகளுக்குப் பின் தள்ளியுள்ளது.”

