கோவை மாவட்டம், ஆனைமலை அடுத்த பெத்தநாயக்கனூர் கிராமத்தில் இறந்து போனதாக கூறப்பட்ட முதியவர் உயிருடன் நடந்து வந்ததால் பரபரப்பு
ஆனைமலை அடுத்த பெத்தநாயக்கனூரை சேர்ந்தவர் காளிதாஸ் (38) இவரது தந்தை மருதமுத்து (63)இவர் கடந்த ஏழாம் தேதி மதியம் தென்சங்கம்பாளையம் சாலை உள்ள அட்டை தொழிற்சாலை அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டு, சாலையில் மயங்கி விழுந்துள்ளார்.
அவ்வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மருதமுத்து தனது மகன் காளிதாசின் அலைபேசி எண்ணை மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். சிகிச்சை பெற்று வந்த முதியவர் மருதமுத்து நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து தப்பித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று மதியம் மருதமுத்து இறந்து விட்டதாகவும் உடலை பெற்றுச் செல்லுமாறு அவரது மகன் காளிதாஸ்க்கு கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தொலைபேசி வாயிலாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து உறவினர்கள் அவரை அடக்கம் செய்வதற்காக இடுகாட்டில் குழி தோண்ட ஏற்பாடுகளை செய்துவிட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
அங்கு பிரேத பரிசோதனை முடிக்கப்பட்ட பின்னர் சடலம் மருதமுத்துவின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சடலத்தைப் பெற்றுக் கொண்டு ஊருக்கு திரும்பிய உறவினர்கள் சடலத்திற்கு இறுதிச்சடங்குகள் செய்ய பூ பழம் பத்தி மாலை வாங்கி வைத்துள்ளனர்
இந்நிலையில் சமத்தூர் கிராமத்தில் மருதமுத்து நடந்து சென்று கொண்டிருப்பதை கண்ட உறவினர்கள் அதை வீடியோவாக எடுத்து மருதமுத்துவின் மகன் காளிதாஸ்க்கு அனுப்பி உள்ளனர். இதையடுத்து இறுதிச்சடங்கு பணிகளை நிறுத்திய உறவினர்கள், மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்த சடலம் யாருடையது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

