முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கை விரைந்து விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான பிரதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த அணை விவகாரத்தில் அணை மேற்பார்வைக் குழுவின் வழிமுறைகளை முறையாகச் செயல்படுத்த கேரளா அரசுக்கு உத்தரவிடக் கோரி, கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் விரிவான நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்தச் சூழலில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இன்று முக்கிய முறையீட்டை முன்வைத்தார். அப்போது, ‘முல்லைப் பெரியாறு அணையில் மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகின்றன.
இதற்கு கேரளா அரசு தரப்பில் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு முட்டுக்கட்டை போடப்படுகிறது. எனவே, அணை விவகாரத்தில் மிக முக்கியமான உத்தரவுகளை நீதிமன்றத்திடம் இருந்து பெற வேண்டி இருப்பதால், நிலுவையில் இருக்கும் இந்த வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும்’ என்று அவர் வாதிட்டார். தமிழ்நாடு அரசின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்த தலைமை நீதிபதி, முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விரைந்து விசாரிக்கும் என்று உறுதி அளித்து உத்தரவிட்டார். ஒன்றிய அரசு மற்றும் கேரளா அரசின் பல்வேறு தடைகளால் அணையின் பராமரிப்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு தமிழகத்தின் விவசாய உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

