கரூர் மாவட்டத்தில் 45 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அதற்கு தனி கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் ரவிக்குமார் பேட்டி.
கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் ரவிகுமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அங்கீகரிப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்காக கரூர் தேர்தல் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 645 வாக்குச்சாவடி அமைவிடங்களில் 1111 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 4,06,027 , பெண் வாக்காளர்கள் 4,39,054 மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 83 என மொத்தம் 8,45,164 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் மேற்படி தேர்தல் அறிவிப்பாணையை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் 15.03.2026 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.
இதனால் பொது இடங்களில் விளம்பரங்கள் மற்றும் பதாகைகள் 48 மணி நேரத்திற்குள் அகற்றவும் மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள விளம்பரங்கள் மற்றும் பதாகைகள் 72 மணி நேரத்திற்குள் அகற்றிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கரூர் மாவட்டத்திலுள்ள உரிமம் பெற்ற படைக்கலன்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில் 45 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அதற்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் தொடர்பான மாநகராட்சி, நகராட்சி , பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் தனியார் கட்டிடங்களில் அனுமதி பெறாமல் செய்யப்பட்ட சுவர் விளம்பரங்கள் தொடர்பாக புகார்கள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவின புகார்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 24X7 கட்டுப்பாட்டு அறைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் 1800 599 4403 தெரிவிக்கலாம் என கூறினார்.
தேர்தல் தொடர்பான புகார்களை கண்காணிக்க ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். பறக்கும் படையினர் தேர்தல் தொடர்பான புகார்களை கண்காணித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலை அமைதியாகவும், நியாயமான முறையிலும் நடத்திட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்தென மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

