ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 12,500 கன அடியாக உயர்ந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க தடை நீட்டிக்கப்பட்டது. நேற்று வினாடிக்கு 8,000 கன அடி நீர் வந்துகொண்டிருந்தது.
கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து தமிழகத்திற்கான தண்ணீரை திறந்து விட கர்நாடகா மறுத்து வந்த நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால், கர்நாடகா அணைகள் வேகமாக நிரம்பின. எனவே, பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியத்தின் ஆணைப்படி, கடந்த 15ம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு தமிழகத்திற்கு வினாடிக்கு 12,298 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தர்மபுரியில் ஒகேனகல்லுக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, பரிசல் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்றிரவு 8 ஆயிரம் கனஅடியாக இருந்த ஒகேனக்கல்லின் நீர்வரத்து, இன்று காலை 12,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. எனவே, பரிசல் இயக்குவதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி கரையோரப் பகுதிகளில் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
