Skip to content

கரூரில் ரூ.4 கோடி நிதி மோசடி – பைனான்ஸ் உரிமையாளர்கள் 2 பேர் கைது

கரூர் கோவை மெயின் ரோட்டில் உள்ள மோகன்ராம் பிளாசாவில் ‘விஷால் பைனான்ஸ்’ என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி 16 முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 4 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால், உறுதி அளித்தபடி பணத்தைத் திருப்பித் தராமல் அந்நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது.

இது குறித்துப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் கடந்த மார்ச் 12-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டு துணைக்காவல் கண்காணிப்பாளர் ராஜா ரவித்தங்கம் தலைமையில் கரூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ஆய்வாளர்களைக் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்த சோதனையில், நிதி நிறுவனத்தின் பங்குதாரர்களான சித்ரா, பொன்னுசாமி
ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். கைதான இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற நபர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி விஷால் பைனான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் யாரேனும் இருந்தால், அவர்கள் உடனடியாக தகுந்த ஆவணங்களுடன் காவல் ஆய்வாளர் அலுவலகம், பொருளாதார குற்றப்பிரிவு, காமதேனு நகர், வெங்கமேடு, கரூர் என்ற முகவரியில் புகார் அளிக்குமாறு கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளனர்.

error: Content is protected !!