வட கொரியாவில் சர்வாதிகாரப் போக்கு அதிகம் என்பது நமக்கு தெரியும். அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உண்டு. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதே மற்ற உலக நாடுகளுக்கு தெரியாது. அங்கு தேர்தல் என்பது பெயரளவுக்கே நடக்கிறது.
ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சி தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்களுக்கு மக்கள் 100% ஒப்புதல் அளிக்கும் வகையில், எதிர்க்கட்சிகள் இன்றி, பெரும்பாலும் ஒரு வேட்பாளர் மட்டுமே நிறுத்தி தேர்தல் நடக்கும். இது ஜனநாயகமற்ற நடைமுறை என உலகம் முழுவதும் கருதப்படுகிறது.
வடகொரியா உருவானது முதலே ஒரு கட்சி ஆட்சி முறை அமலில் உள்ளது. தாத்தா, தந்தை, பேரன் என தற்போது மூன்றாம் தலைமுறை வாரிசான கிம் ஜோங் உன் தலைமையில் ஆட்சி நடக்கிறது. கடந்த மார்ச் 15ம் தேதி பொதுத்தேர்தல் நடந்தது. தேர்தலில் 99.93% ஓட்டுகளுடன் கிம் ஜாங் அன் தலைமையிலான கூட்டணி கட்சி வெற்றி பெற்றுள்ளது என வட கொரியா அரசு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங்-கும் முக்கியமானவர் ஆவார். இவர் கல்லிம்கில் தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

