மராட்டிய மாநிலத்தில் நாளை நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு முன்பு வினாத்தாள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் ஜூன் 28-ந்தேதி(நாளை) ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற இருந்தது. இதற்கிடையில், தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிந்துவிட்டதாக தானே மாவட்டத்தின் பிவண்டி நகர காவல்துறைக்கு இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் பிவண்டி நகர் பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், சில நபர்களிடம் இருந்து வினாத்தாள்கள் கைப்பற்றப்பட்டன. அந்த வினாத்தாள்களை உயர்மட்ட ஆய்வுக்கு அனுப்பியபோது, அவை அசல் வினாத்தாள்களுடன் ஒத்துப்போனதாக போலீசாருக்கு தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், நாளை நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மராட்டிய மாநில தேர்வுக் குழு அறிவித்துள்ளது. தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நீட் வினாத்தாள்கள் இதேபோல் கசிந்த நிலையில், நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
