தஞ்சைக்கு வந்த எர்ணாகுளம் வேளாங்கண்ணி வாராந்திர ரயிலுக்கு மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் சார்பில் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மீட்டர் கேஜ் இருப்புப் பாதை இருந்த காலத்தில் நாகூரில் இருந்து தஞ்சாவூர் மதுரை செங்கோட்டை வழியாக கொல்லத்திற்கு தினமும் ரயில் இயக்கப்பட்டு வந்தது. அகல ரயில் பாதை பணிகளுக்காக மாற்று தடத்தில் இயக்கப்பட்ட அந்த ரயில் பின்னர் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இந்த ரயில் இயக்கப்பட்ட காலக்கட்டத்தில் அதிகளவில் தஞ்சாவூர் பயணிகள் பயன்பெற்று வந்தனர்.
மதுரை, செங்கோட்டை செல்லும் பயணிகளுக்கு இந்த ரயில் மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்தது. அகல ரயில்பாதையாக மாற்றப்பட்ட நிலையில் இந்த ரயில் நிறுத்தப்பட்டதால் தஞ்சையில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் பகுதிக்கு கிடைத்து வந்த நேரடி ரயில் இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. இது வர்த்தகர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் மிகவும் உபயோகமாக இருந்து வந்தது. இந்நிலையில் தஞ்சை வழியாக முன்பு இயங்கிய நாகூர் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் தொடர்ந்து இயக்க வேண்டும் என்று ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து சில வருடங்களுக்கு முன்பு எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணி வரை மதுரை தஞ்சை வழியாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலில் பயணிகள் பயன்பாடு மிகுந்து காணப்பட்டது. இதனால் தொடர்ந்து நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வந்தனர். கேரளப் பகுதியைச் சார்ந்த மாவேலிக்கரா மற்றும் கொல்லம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மூலம் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே மதுரை தஞ்சை வழியாக நிரந்தர ரயில் இயக்க கோரிக்கை விடுத்தார். அதையடுத்து கடந்த வாரம் எர்ணாகுளம் வேளாங்கண்ணி வாராந்திர ரயிலை தஞ்சை வழியாக இயக்க தென்னக ரயில்வே அனுப்பிய பரிந்துரைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.
இந்த ரயில் நேற்று புதன்கிழமை இரவு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு இன்று வியாழக்கிழமை மதியம் 2.45 மணிக்கு தஞ்சாவூர் வந்தடைந்தது. இந்த புதிய ரயிலுக்கு தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் சார்பில் மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. ரயிலை இயக்கி வந்த டிரைவர்கள் ரஸல், ரகுபாண்டி மற்றும் ரயில் மேலாளர் (கார்டு) ராஜேஷ்குமார் ஆகியோருக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கினர். பயணிகளுக்கு ரயில்வே விழிப்புணர்வு, ரயிலின் கால அட்டவணை மற்றும் இனிப்பு அடங்கிய வாழ்த்து அட்டைகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கத் துணைத் தலைவர் எம்.மாறன், செயலாளர் ஏ.கிரி, இணைச் செயலாளர்கள் பாபநாசம் டி.சரவணன், ஸ்ரீதரன் பொருளாளர் நடராஜ் குமார், செயற்குழு உறுப்பினர் தீபக்வசந்த், கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரயில் தஞ்சாவூரில் இருந்து பல வருடங்களுக்குப் பிறகு கேரள மாநிலம் புனலூர் கொல்லம் கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மீண்டும் நேரடி இணைப்பை கொடுக்கிறது. மேலும் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு மிக வசதியாக அமையும். பயணிகள் பயன்பாட்டை பொருத்து இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என பயணிகள் கூறினர்.

