டெல்லிக்கு பழனிசாமி ஓடுவதற்குப் பெயர்தான் கூட்டணிக்குத் தலைமை தாங்குவதா? இனி இது அதிமுக கூட்டணி இல்லைம, பாஜக கூட்டணி. அமலாக்கத் துறையும் சிபிஐயும் சம்மன் அனுப்புவது போல, தொகுதிப் பங்கீட்டுக்கு பழனிச்சாமியை அழைத்திருக்கிறார் அமித்ஷா என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்றிருப்பதைப் பார்க்கும் போது, ஐயா திரைப்படத்தில் வரும் காமெடி காட்சிதான் நினைவுக்கு வருகிறது. நடிகர் வடிவேலுவை வீட்டில் வைத்து அடித்துத் துவைத்து வெளியே அனுப்பும் போது , ‘’அண்ணே… பிரமாதம். இந்த டீலிங் நமக்குள்ளேயே இருக்கட்டும்’’ என வடிவேலு பேசும் டயலாக் அப்படியே பழனிசாமிக்கு கச்சிதமாகப் பொருந்தும். இரவு 8.30 மணிக்கே சந்திப்பு நடைபெறும் எனச் சொல்லப்பட்ட நிலையில், 2 மணி நேரமாக அமித்ஷாவின் அழைப்புக்காக காத்திருந்து சந்தித்திருக்கிறார் அடிமை பழனிசாமி. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தமிழ்நாட்டில் தலைமை அதிமுக என்று சொன்னால் அந்த அதிமுகவின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில்தானே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ஆனால், பாஜக தலைவர் அமித்ஷா வீட்டில் அல்லவா பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சியின் அலுவலகத்தில் இதுவரை ஒருமுறை கூட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமியின் சென்னை ‘செவ்வந்தி இல்லத்தில்’ கூட வேண்டாம். எம்ஜிஆர் ஆசை ஆசையாக உருவாக்கிய ராயப்பேட்டை அலுவலகத்திலாவது கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தக் கூடாதா? அதற்குக்கூடத் திராணி இல்லாமலா இருக்கிறது அதிமுக? அவ்வை சண்முகம் சாலையில் இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தைப் பெரிய திண்டுக்கல் பூட்டைப் போட்டுத் தேர்தல் முடியும் வரை பூட்டி வைத்துவிடுங்கள் பழனிசாமி. அதிமுகவை இப்படிக் கொண்டு வந்து பழனிசாமி நிறுத்திவிட்டாரே என்றுதான் என்ற அதிமுக தொண்டர்களே ஆதங்கத்தில் இருக்கிறார்கள்.
கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சிதான் பாஜகவுக்கு இத்தனை இடங்கள், பாமகவுக்கு இத்தனை இடங்கள், அமமுகவுக்கு இவ்வளவு இடங்கள் என ஒதுக்கி, ஒப்பந்தம் போட வேண்டும். இப்படிதான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபு. ஆனால், கூட்டணியில் அதிமுகவிற்குக் கூடுதல் இடங்களைக் கொடுங்கள் எனக் கேட்டுப் பெறுவதற்காக எடப்பாடி பழனிசாமி இன்னொரு கட்சியின் தலைவர் அமித்ஷா வீட்டில் காத்துக் கிடப்பது எல்லாம் காலக் கொடுமை. பாஜக – அதிமுக கூட்டணி தொடர்பாக அமித்ஷாவிடம் பேசுவதற்காக இதுவரை ஐந்து முறையும் கூட்டணி முடிவான பிறகு 4 முறையும் டெல்லி சென்றிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. தமிழ்நாட்டை அதிக முறை ஆட்சி செய்ததாக மார்தட்டிக் கொள்கிறார்கள். அதிமுகவின் பொதுச் செயலாளர் ஒருவர் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக டெல்லிக்கு படையெடுப்பது பழனிசாமி காலத்தில் நடந்த வரலாற்று அதிசயம்! கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 3-ஆவது முறையாக டெல்லிக்கு சென்றிருக்கிறார் பழனிசாமி. ஒவ்வொரு முறையும் அமித்ஷாவுடன் ஆலோசித்து முடிவெடுக்கும் அதிமுக, அண்ணா அதிமுகவா? இல்லை அமித்ஷா அதிமுகவா? பழனிசாமி மட்டுமல்ல, கூட்டணியில் இருக்கும் அன்புமணியும் டிடிவி தினகரனும் அமித்ஷாவை சந்திக்கிறார்கள். பழனிசாமிக்கு நாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிரூபிக்கிறார்கள்.

கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களைப் பிரித்துக் கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டிய அதிமுக, தனது கட்சிக்கு எத்தனை சீட்டுகள் என்பதைக் கூடத் தீர்மானிக்க முடியாமல் டெல்லிக்குச் சென்று அமித்ஷாவின் வீட்டு வாசலில் காத்துக் கிடக்கிறது. பழனிசாமி அவர்களே… கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 2-ஆவது தீர்மானம் உங்களுக்கு நினைவு இருக்கிறதா? ’சட்டமன்றப் பொதுத் தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு, ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ தலைமை தாங்குகிறது! கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை, அதிமுக பொதுச் செயலாளர், ‘புரட்சித் தமிழர்’ எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு, இப்பொதுக்குழு ஏகமனதாக வழங்குகிறது!’ என்ற அந்தத் தீர்மானத்தின் வரிகளை இப்போது படிக்கும் போது சிரிப்புதான் வருகிறது. ‘’அப்ப… கடைக்கு ஓனர் டக்ளஸ் அண்ணே இல்லையா.? வெளியில இப்படித்தான் சொல்லிக்கிட்டு அலையுறியா.?’’னு அதிமுக தொண்டர்களின் மைண்ட் வாய்ஸ் பழனிசாமிக்கு கேட்கவில்லையா? கூட்டணி முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பெற்ற அந்தப் புரட்சித் தமிழர்தான் (?) டெல்லியில் அதிமுகவின் சீட்டுக்காக மிரட்சியுடன் காத்துக் கிடக்கிறார். ‘கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்குகிறது’ எனப் பொதுக்குழு தீர்மானத்தில் சொன்னீர்கள். அந்தத் தீர்மானம் இயற்றிய ஒரு மாதத்தில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலைச் சந்தித்து கூட்டணியில் இணைந்தார் தினகரன். அப்படியென்றால் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் அதிமுக என்ன ஆனது? அதற்கு எந்த ரோலும் இல்லையா? ’’இனிமே உன் பேர் தீப்பொறி திருமுகம் இல்லை. ரத்தத் திருமுகம்தான்’’ என்ற வடிவேலுவின் நிஜப் பாத்திரமாகவே மாறிவிட்டார் பழனிசாமி.
கூட்டணி அமைப்பது குறித்து முடிவெடுக்க பழனிசாமிக்கு முழு அதிகாரம் அளிக்கும் தீர்மானத்தை அப்படியே எடுத்துக் கொண்டு போய் அமித்ஷாவின் காலடியில் சமர்ப்பித்து விட்டு, அவரின் உத்தரவுக்காகக் காத்துக் கிடக்கிறார் பழனிசாமி. விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறையும் சிபிஐயும் சம்மன் அனுப்புவது போல, தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்கு அமித்ஷா, எடப்பாடி பழனிச்சாமியை அழைத்திருக்கிறார். அதிமுகவும் பாஜகவும் பரஸ்பரம் சம்மதித்து உருவான கூட்டணியா? இல்லை சம்மன் கூட்டணியா? வார்த்தைக்கு வார்த்தை அதிமுகதான் தலைமை என்று கூறிவிட்டு, இத்தனை முறை ஏன் டெல்லிக்கு பழனிச்சாமி செல்ல வேண்டும்? கூட்டணிக்கு அதிமுக தலைமை என்றால், அதிமுக விரும்பும் இடத்தில் இதுவரை தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையே நடைபெறவில்லை. 2021 தேர்தலில் கூட அமித்ஷா சென்னை வந்து ஹோட்டலில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தினார். இப்போது டெல்லிக்கு பழனிசாமி ஓடுவதற்குப் பெயர்தான் கூட்டணிக்குத் தலைமை தாங்குவதா? எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்த போது, அரசின் நடவடிக்கையில் பாஜக தலையிட்டது. இப்போது அதிமுகவின் உள்கட்சி விவகாரத்திலும் தலையிடுகிறது. தொகுதிப் பங்கீட்டைக் கூட அமித்ஷாவிடம் கேட்டுச் செய்வதற்கு பதிலாக ’பாஜகவின் கிளைக் கழகம்தான் அதிமுக’ எனக் கட்சியின் பைலா-வையே (By-laws) திருத்திவிடுங்கள் பழனிசாமி!
“டெல்லி அணி – தமிழ்நாடு அணி இடையேதான் போட்டி; இதில் தமிழ்நாடு அணி வெல்லும்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து சொல்வது ஏன் என்பது இப்போது புரிகிறதா? அதிமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டைக் கூட டெல்லி முடிவு செய்யும் என்றால், இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு என்ன ஆபத்து ஏற்படும் எனத் தெரிகிறதா? கட்சியையே டெல்லியில் அடமானம் வைக்கத் துணிந்த பழனிசாமி, தமிழ்நாட்டை மட்டும் விட்டு வைப்பாரா? தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் இழைப்பதும் பாஜகவிற்கு ஆயுள் அடிமையாக இருப்பதும்தான் பாதந்தாங்கி பழனிசாமிக்கு தெரிந்த ஒரே கலை! ஆட்சியில் இருந்த போது தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜகவுக்குக் காவு கொடுத்த பழனிசாமி, இப்போது அதிமுக தொண்டர்களையும் முழுமையாக அடகு வைத்துவிட்டார். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என பழனிசாமி போகிற இடமெல்லாம் புலம்பினாலும் அமித்ஷாவும், மோடியும் அதைப் பொருட்படுத்தவே இல்லை. பழனிசாமியை மேடையில் வைத்துக் கொண்டே ’NDA கூட்டணி ஆட்சி அமையும்’ என அவமானப்படுத்துகிறார்கள். மதுராந்தகம், மதுரை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமியின் பெயரை ஒருமுறை கூட உச்சரிக்கவில்லை. இந்த அவமானம் பழனிசாமிக்கு தேவையா? மோடி, அமித்ஷா மட்டுமல்ல அவர்கள் கூட்டணியில் இணைந்திருக்கும் டிடிவி தினகரன் கூட பழனிசாமியை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. இந்த லட்சணத்தில்தான் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக தலைமையாம்!
மானம் தமிழரின் உணர்வோடு கலந்தவை. அதனால்தான் மானத்தைப் பற்றி ஒரு முழு அதிகாரத்தையே எழுதியிருக்கிறார் திருவள்ளுவர்.
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்
என்ற குறளுக்குப் பொருள் தெரியுமா? தன் உடலில் உள்ள மயிர்க்கற்றைகளில் இருந்து ஒரு முடி நீங்கினாலும், அந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் உயிர்விடும் இயல்புடையது கவரிமான். தங்களுக்கு ஒரு சிறு அவமானம் அல்லது கௌரவக் குறைச்சல் ஏற்படும் சூழல் வந்தால், அந்த மானத்தைக் காப்பவனே தமிழன். மானம் என்றால் என்ன விலை? எனக் கேட்குமளவிற்கு அடிமைத்தனத்தில் ஊறிப் போயிருக்கும் பழனிசாமியை இந்தத் தேர்தலோடு தமிழ்நாட்டு மக்கள் அரசியலை விட்டே அப்புறப்படுத்தப் போவது உறுதி. இந்த அடிமைகளை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் நுழைந்துவிடலாம் எனக் கற்பனைக் குதிரையை ஓட்டிக் கொண்டிருக்கிறது பாஜக. அதன் பித்தலாட்ட நாடகத்தைத் தோலுரித்து காட்டிதான், இந்தத் தேர்தல், தமிழ்நாடு vs என்.டி.ஏ எனச் சூளுரைக்கிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ’’தமிழ்நாடு டெல்லிக்கு out of control’’ என்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ‘’டெல்லிக்கு வா பழனிசாமி’’ என்கிறார் அமித்ஷா. இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைத் தமிழக மக்கள் புரிந்து கொண்டார்கள். அடிமைக் கூட்டணிக்குத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மரண அடி கொடுக்க காத்திருக்கிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு வெல்லும், திராவிட மாடல் ஆட்சி 2.0 அதைச் சொல்லும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

