பெரியகுளம் தொகுதிக்கு எம்எல்ஏ சீட் வாங்கித் தருவதாக கூறி திமுக பிரமுகரிடம் ரூ.1.30 கோடி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் திமுக பிரமுகர் நாகலிங்கம். இவரது மனைவி சுதா திமுக சார்பில் போட்டியிட்டு பெரியகுளம் நகர்மன்ற 14வது வார்டு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரியகுளம் ( தனி ) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடந்த கட்சி தலைமை அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்த நாகலிங்கத்தை கடந்த மார்ச் 05 ஆம் தேதியன்று வாட்ஸ்அப் அழைப்பில் தொடர்புகொண்ட நபர் தன்னை தினேஷ் என்று அறிமுகம் செய்துள்ளார். மேலும் திமுக தலைமை அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறிய அந்த நபர், பெரியகுளம் தொகுதி நிலவரங்களை கேட்டறிந்து தனக்கு தலைமை கழக நிர்வாகிகளுடன் தொடர்பிருப்பதால் பணம் கொடுத்தால் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட சீட் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.
அதனை நம்பிய நாகலிங்கம், செல்போனில் தொடர்பு கொண்ட தினேஷ் சொன்னது போல் பெரியகுளம் பகுதியில் உள்ள முன்னாள் நகர கூட்டுறவு சங்கத் தலைவரான அபுதாஹீர் என்பவரிடம் கடந்த 15 ஆம் தேதியன்று 1.30 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேர்காணல் நேற்று மார்ச் 18 ஆம் தேதியன்று திமுக சார்பில் நடத்தப்பட்ட நிலையில், நாகலிங்கத்திற்கான அழைப்பு ஏதும் கிடைக்காததால் சந்தேகம் அடைந்து தன்னிடம் தொடர்பு கொண்ட நபரை அழைத்தும் முடியாததால், பணம் பெற்ற அபுதாஹீரிடம் கேட்டுள்ளார்.அதற்கு தன்னிடம் கொடுத்த பணத்தை திமுக தலைமை கழக நிர்வாகிகள் சொன்னது போல பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் வாங்கிச் சென்றதாக கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த நாகலிங்கம் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப் பதிந்து போலீசார் நடத்திய விசாரணையில், தினேஷ் என்ற பெயரில் நாகலிங்கத்தை தொடர்பு கொண்ட நபர் பெரியகுளம் – ஆசீப்ராஜா எனத் தெரியவந்தது. இதையடுத்து ஆசீப்ராஜா, கார்த்திக் ஆகிய இருவரை கைது செய்த பெரியகுளம் தென்கரை போலீசார் இதில் வேறு யாருக்கும் தொடர்பிருக்கிறதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

