தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் அண்ணா நகர் காலனியை சேர்ந்தவர் சிங்காரம். இவரது மனைவி பார்வதி. இந்த தம்பதியின் மகன் அழகு மாரியப்பன் (29). தனியார் பேருந்து டிரைவர். இவருக்கும் புதியம்புத்தூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி திருமணம் நடந்தது.
அழகு மாரியப்பனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அழகு மாரியப்பன், மனம் உடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கினர். ஏற்கனவே மனவேதனையில் இருந்த அழகு மாரியப்பன் நேற்று அதிகாலையில் தனது வீட்டு ஆட்டு தொழுவத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூங்கி எழுந்த உடன் வெளியே வந்த அவரது பெற்றோர் இந்த காட்சியை கண்டு கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குளத்தூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழகு மாரியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரே மாதத்தில் புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
