புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் 13 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 14 தொகுதிகளில், ஒரு தொகுதியை விசிகவுக்கு கொடுத்திருக்கிறது. மீதமுள்ள 13 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 9ஆம் தேதி நடக்கவுள்ளது. புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்ட நீண்ட காலம் எடுத்தது. ஒரு கட்டத்தில் திமுகவினர் 30 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். இறுதியாக காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், திமுக 14 தொகுதிகளிலும் போட்டியிடலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.
விசிக தரப்பில் காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்ட போதும், காங்கிரஸ் கட்சி தொகுதியை ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த திருமாவளவன், புதுச்சேரியில் விசிக 3 தொகுதிகளில் தனித்தே போட்டியிடும் என்று அறிவித்தார். இந்த நிலையில் திமுக தரப்பில் விசிகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதாவது திமுக வசம் அளிக்கப்பட்ட 14 தொகுதிகளில் உழவர்கரை தொகுதி விசிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் திமுக தரப்பில் போட்டியிடும் 13 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வில்லியனூர் தொகுதியில் சிவா, மங்கலம் தொகுதியில் எஸ்.எஸ்.ரங்கன், திருபுவனை தொகுதியில் அங்காலன் போட்டியிட உள்ளனர்.
அதேபோல் பாகூர் தொகுதியில் ஆர்.ஆர்.செந்தில்குமார், முதலியார்பேட்டை தொகுதியில் சம்பத், உப்பளம் தொகுதியில் அனிபால்கென்னடி, உருளையன்பேட்டை தொகுதியில் எஸ்.கோபால், நெல்லித்தோப்பு தொகுதியில் கார்த்திகேயன், ராஜ்பவன் தொகுதியில் விக்னேஷ், காலப்பட்டு ஏ.செந்தில் (எ) ரமேஷ், கதிர்காமல் தொகுதியில் வடிவேலு, காரைக்கால் தெற்கு தொகுதியில் ஏ.எ.எச்.நாஜிம், நிரவி டி.ஆர்.பட்டிளம் தொகுதியில் நாகதியாகராஜன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

