1988 முதல் பராமரிப்பில் இருந்த யானை ; முதுமலையில் இருந்து கோவை முகாமிற்குப் பாதுகாப்பாகக் கொண்டு வரப்பட்டது !!!
திருப்பத்தூர் வனப் பிரிவில் 1988-ஆம் ஆண்டு அனாதையாகக் கண்டெடுக்கப்பட்டு, பல ஆண்டுகளாக வனத் துறையின் அரவணைப்பில் வளர்ந்த பெண் யானை ஒன்று, நிர்வாக மற்றும் மேலாண்மைத் தேவைகளுக்காகச் சாடிவயல் முகாமுக்கு வெற்றிகரமாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சுமார் 38 ஆண்டுகளுக்கு மேலாக வனத் துறையினரின் அன்பிலும், பாதுகாப்பிலும் வளர்ந்து வரும் இந்த யானை, முதுமலை புலிகள் காப்பகத்தின் (MTR) ஒரு அங்கமாக இருந்து வந்தது. தற்போது,

வனத் துறையின் நிர்வாகச் செயல்பாடுகள் மற்றும் யானையின் மேலாண்மைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அதனைச் கோவை, சாடிவயல் முகாமிற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இந்த இடமாற்றப் பணியானது நேற்று (மார்ச் 23) முழுமையான பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டது:
இந்தச் செயல்முறை முழுவதும் களப் பணியாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினரின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்றது.
இடமாற்றத்தின் போது யானைக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படாதவாறு, அதன் பாதுகாப்பு மற்றும் மனநலனை உறுதி செய்யும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
இடமாற்றம் குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,
“யானை புதிய சூழலுக்குச் சென்று அடைந்து, தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. புதிய முகாமுக்கு அது நன்கு பழகி விட்டது,” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.
காட்டு யானைகளின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் நல்வாழ்வில் வனத்துறை காட்டி வரும் இத்தகைய ஈடுபாடு, விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது.
