சேலம் மாவட்டம் கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதியில் சட்ட விரோதமாக கர்ப்பிணிகளுக்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிவதாக கெங்கவல்லி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நித்தியாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கெங்கவல்லி போலீசார் உதவியுடன் மருத்துவர் நித்தியா தலைமையிலான 4 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் கெங்கவல்லி அருகே நடுவலூர் புத்து மாரியம்மன் கோயில் பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது, ஜெயசூர்யா என்பவரது வீட்டில், 2 கர்ப்பிணிகளுக்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய ஸ்கேன் மிஷின் வைத்திருந்ததை மருத்துவ குழுவினர் கண்டுபிடித்தனர். அங்கிருந்த 2 பெண்களை பிடித்து விசாரித்ததில், தலைவாசல் அருகே வேப்பநத்தம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மனைவி குணவதி (24), சின்னசேலம் சிறுப்பாக்கம் பகுதியை சேர்ந்த சரவணன் மனைவி அம்சவேணி (44) என தெரியவந்தது. இவர்கள், கோவிந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு கர்ப்பிணியையும், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரை சேர்ந்த ஒரு கர்ப்பிணியையும் ஸ்கேன் செய்ய அழைத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஸ்கேன் மிஷினை போலீசார் பறிமுதல் செய்து, அந்த கும்பலை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து, மருத்துவ அலுவலர் டாக்டர் நித்தியா கொடுத்த புகாரின்பேரில் செவிலியர் அம்சவேணி, புரோக்கராக செயல்பட்ட குணவதி, வீட்டை வாடகைக்கு விட்ட ஜெயசூர்யா (27) ஆகிய மூவர் மீது வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், ஆத்தூர் காமராஜனார் ரோட்டில் உள்ள ஒரு கிளினிக்கில் நர்சாக பணியாற்றி வந்த அம்சவேணி மற்றும் குணவதி ஆகியோர், நடுவலூர் கிராமத்தில் ஏற்கனவே ஸ்கேன் மிஷின் மூலமாக கர்ப்பிணிகளுக்கு கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறியுள்ளனர். இதையடுத்து, அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. இவர்கள் கள்ளக்குறிச்சி, ஆத்தூர், சின்னசேலம், சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து அப்பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் செய்து வருவதும், அதற்காக ரூ.30 ஆயிரமும், புரோக்கர் கமிஷனாக ரூ.3 ஆயிரம் வாங்கியதும் தெரிய வந்துள்ளது.
