: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தவெக வந்தால், எங்கள் வாக்கு வங்கியே பாதிக்கும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு ஆளுங்கட்சி முதல் புதிய கட்சிகள் வரை தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் அதிமுகவுடனான உறவு சகோதரத்துவ அடிப்படையில் வலுவாக இருப்பதாக தெரிவித்த ஒன்றிய அமைச்சர் அமித் ஷா, தவெக தலைவர் விஜயுடன் கூட்டணி குறித்து பேசவில்லை எனவும் கூறினார். இதுகுறித்து தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில்; தமிழ்நாட்டில் பாஜகவின் பணி மிகக் குறைவானது எனவும் கூட்டணி கட்சிகளே பெருவாரியான பொறுப்புகளை மேற்கொண்டதாகவும் கூறினார்.
தேசிய ஜனநாயக் கூட்டணியை பொறுத்தவரை மூத்த சகோதரர் போன்று அதிமுக செயல்படுவதாக தெரிவித்த அமித் ஷா, அதிமுகவுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் கூறினார். விஜய் கட்சியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தவெக வந்தால், எங்கள் வாக்கு வங்கியே பாதிக்கும். தமிழ்நாட்டில் அமைப்பு ரீதியாக பாஜகவின் பலம் குறைவு என்பது அனைவரும் அறிந்ததே என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

