திருச்சியில் கொலை செய்யப்பட்ட பேரூராட்சி கவுன்சிலர் உடலை பெற மறுத்து உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனை வாயிலில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கூத்தைப்பார் பேரூராட்சி கவுன்சிலர் ரஞ்சித் குமார் (40) இவர் நேற்று முன்தினம் நவல்பட்டு அருகே மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக மாவட்ட போலீசார் வழக்கு பதிந்து இந்த கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று உயிரிழந்த ரஞ்சித் குமார் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட இருந்தது.
இதையடுத்து இறந்தவரின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டு கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பந்தப்பட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்படாத உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து உடனடியாக போலீசார் அங்கு திரண்டு இருந்த போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயன்றனர். பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டத்தை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. கொலை செய்யப்பட்ட ரஞ்சித் குமாரின் மகள் செய்டா நிருபர்களிடம் கூறுகையில்…எனது தந்தை திமுகவில் பேரூராட்சி கவுன்சிலராக இருந்தார். அவருக்கு இதற்கு முன் எந்த முன் பகையும் இல்லை இருந்த போதும் இவ்வாறு பயங்கரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்அவரது கொலைக்கு நியாயம் கிடைக்கும் வரை கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறினார்.

