கோவையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டுள்ளார். வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து ஆதரவு திரட்டுகிறார். 2021ல் திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு நான் அதிகம் முறை வந்த மாவட்டம் கோவைதான் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.
கோவை என்னுடைய ஊர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஒன்றிப்போய் இருக்கிறேன். நினைத்ததை சாதித்துக் காட்டுபவர் செந்தில் பாலாஜி; அதனால்தான் கோவையில் களம் காண்கிறார். செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜிதான். எதிர்பார்ப்பதற்கும் மேலாக செயலாற்றக் கூடிய ஆற்றல் படைத்தவர் செந்தில் பாலாஜி. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை கோவை மக்கள் தந்துள்ளீர்கள். கலவரம் செய்தால் வெற்றி பெற்றுவிடலாம் என செயல்படும் கட்சிக்கு தக்க பதிலடியை மக்கள் கொடுக்க வேண்டும். 2026 தேர்தலிலும் இதே போன்ற வெற்றியை தர வேண்டும்.
திராவிட மாடல் ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் பல சாதனை திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். கோவையில் செம்மொழிப்பூங்கா, ஜி.டி.நாயுடு மேம்பாலம் அமைத்துள்ளோம். ஜி.டி.நாயுடு மேம்பாலம் இன்னும் 5 கி.மீ. தூரத்துக்கு நீட்டிக்கப்பட உள்ளது. விசைத்தறி, சிறு தொழில்களுக்கு மின்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடியில் பெரியார் அறிவுலகம் அமைக்கப்பட்டு வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் முதல் நிகழ்ச்சியாக பெரியார் அறிவுலகம் திறப்பு விழாவில் பங்கேற்பேன்.
திமுக திட்டங்களைத்தான் பழனிசாமி காப்பி அடித்து வெளியிட்டுள்ளார். மோடி தமிழ்நாட்டுக்கு வந்தால் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதியாகிவிடும். தமிழை, தமிழரை, தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு வஞ்சிக்கிறது. தமிழரை குறை கூறி பீகாரில் பேசியதை, தைரியம் இருந்தால் தமிழ்நாட்டில் பிரதமர் மோடி பேசுவாரா?. பீகாரில் பேசியபோது தமிழ்நாட்டு மக்கள் மீது அபாண்டமாக பழி போட்டவர்தான் பிரதமர் மோடி. ஒடிசாவிலும் தமிழர்களை திருடர்களாக இழிவுபடுத்தி பேசியவர்தான் பிரதமர் மோடி.
சுதந்திர தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் ஊர்திக்கு அனுமதி மறுத்தது பாஜக அரசு. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்தது மோடி அரசு. ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துற மாதிரி ஆக்ராவில் மெட்ரோ ரயில் விட்டுள்ளது பாஜக அரசு. ஒன்றிய பட்ஜெட் தயாரிக்கும்போது தமிழ்நாட்டை மொத்தமாக மறந்துவிடுவார்கள்.
தமிழ்நாட்டு மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை கொடுத்துக் கொண்டே இருப்பேன். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்ததும் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும். காலை உணவு திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட உள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக அல்டிமேட் திட்டமாக ரூ.8,000 கூப்பன் அறிவித்துள்ளோம். ரூ.8,000 கூப்பன் திட்டத்தால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். தமிழ்நாடு முழுவதும் ரூ.8,000 கூப்பன் திட்டத்தைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் பொறுத்திருந்து T தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கலாம் என பழனிசாமி யோசிக்கும் அளவுக்கு ரூ.8,000 கூப்பன் திட்டம். 20 லட்சம் விவசாயிகளுக்கு எந்த மீட்டரும் பொறுத்தப்படாத நவீன பம்புசெட்டுகள் வழங்கப்படும். கோவை மாவட்டத்தில் மோட்டார் தொழிலும் வளர்ச்சி அடையும். மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு மானியத்துடன் தொழில் கடன் வழங்கப்படும். 5 லட்சம் ஏழைகளுக்கு திறன் பயிற்சி அளிக்க உள்ளோம்.

