திமுகவில் பெரிய பூகம்பத்தை உண்டாக்கும் வகையில் ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அது திமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆ.ராசா பேசியிருக்கும் ஆடியோ. இதனை யூ-டியூபர் மாரிதாஸ் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார்.
2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, தன்னை சந்திக்க திமுக எம்.பி அல்லது எம்.எல்.ஏ அல்லது கட்சிக்காரர்கள் யாராவது வந்தார்களா? தான் கைதாகி இரண்டு மாதங்கள் கழித்து கனிமொழி கைது செய்யப்படுகிறார். அதன்பிறகு அமைச்சர்கள் முதல் மூத்த தலைவர்கள் வரை ஒவ்வொருவராக டெல்லிக்கு படையெடுத்து வருகிறார்கள். அதுவரை யாருமே வரவில்லை. அப்போது தன் மனநிலை எப்படி இருந்திருக்கும்?
அந்த சமயத்தில் நான் Burst ஆகியிருந்தால் என்னவாகியிருக்கும்? கலைஞர் டிவிக்கு பணம் சென்றது. என் வீட்டில் ஏதாவது சிபிஐ எடுத்தார்களா? எனக் கேட்கிறார். ஒருநாள் அழகிரி நேரில் வந்து சந்திக்கிறார். கலைஞர் டிவிக்கு வாங்கி கொடுத்தது எல்லாம் ஸ்டாலின் தானாம். நீயும், கனிமொழியும் ஏன் சிறையில் இருக்கிறீர்கள். அப்ரூவராகி விட்டு வெளியே வர வேண்டியது தானே? என்றார்.
கலைஞருக்கு பிறகு கட்சிக்கு அவரிடம் போகும். ஆனால் என்னை விட்டு போகாது. ஆறு மாதமோ, ஒரு வருடமோ அதன்பிறகு காட்சிகள் மாறும். குறிப்பாக தான் வெளியே வந்துவிட்டால் ஹீரோ என்கிறார். புத்தகம் ஒன்று வெளியே வரப் போகிறது. தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் வெளியிடப்படும். இந்து என்.ராம் படித்து விட்டு மலைத்து போய்விட்டார். என்ன சார், இந்த வெளு வெளுத்துவிட்டீர்கள் என என்னிடமே கேட்கிறார். அதில் பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம் என அனைவரையும் பிச்சு எடுத்திருக்கிறேன்.
அந்த புத்தகம் வெளியே வந்ததும் ஒரு ஸ்டாராக மாறும். அது வெளிவரும் வரை அடக்கி வாசிப்பேன். அதன்பிறகு எனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி கொள்வேன். போதுமான பணம் இருக்கிறது. மூளை இருக்கிறது. அப்புறம் என்ன வேண்டும் எனக் கேட்கிறார். கலைஞர் போய்விட்டால் ஸ்டாலின் – கனிமொழி பஞ்சாயத்து வரும்.இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்பது தங்கையை ஸ்டாலின் ஒருபோதும் நம்ப மாட்டார். அப்படியெனில் என்னை வெளியே தள்ள முடியாது. தன்னை எம்.ஜி.ஆர் என நினைத்து கொண்டிருக்கிறார். தலைவர் கலைஞருக்கு பின்னர் தான் இவருக்கு setback வரும். தற்போதைய சூழலில் தலைவரே கைதி மாதிரி இருக்கிறார். ஸ்டாலின் Takeover பண்ணிட்டார் என்று ஆ.ராசா பேசுவது போல் ஆடியோவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்ள முடிவெடுத்த ஆ.ராசா, வழக்கறிஞர்கள் எம். சினேகா மற்றும் கவின் பாரதன் மூலம் மாரிதாஸுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.அதில், தனது பேச்சுக்களை ஆங்காங்கே துண்டித்து எடுத்து கோர்த்து பதிவு செய்துள்ளதாகவும், முழுமையாக பதிவு செய்யவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோக்களை உடனடியாக நீக்குவதுடன், நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் எனவும், இல்லாவிட்டால், அவதூறு மற்றும் மான நஷ்டஈடு வழக்கு தொடரப்படும் எனவும் நோட்டீஸ் மூலம், ஆ.ராசா எச்சரித்துள்ளார்.
அந்த நோட்டீஸில், “மாரிதாஸ் வெளியிட்ட ஆடியோக்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ‘டீப்ஃபேக்’ (Deepfake) மற்றும் புனையப்பட்டவை.ஆ.ராசாவின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கவும், பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவும் ஆடியோ துண்டுகள் வெட்டி ஒட்டப்பட்டு, திரித்து வெளியிடப்பட்டுள்ளன.அந்தத் தவறான பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றும் கூறப்பட்டிருந்தது.
வழக்கறிஞரின் இந்த நோட்டீஸை தன் X பக்கத்தில் பகிர்ந்த மாரிதாஸ், “திமுக ஆ.ராசா அவர்களுக்கு.. Sorry, மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது” என்று கிண்டலான தொனியில் பதிவிட்டுள்ளார்.

