விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த முட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் இவரது மகள் ஜெயஸ்ரீ (16). இவர் திண்டிவனம் அடுத்த பெலாகுப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று சரியாக படிக்கவில்லை என்று ஜெயஸ்ரீயை, சக்திவேல் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். இதில் மயங்கிய அவரை குடும்பத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு ஜெயஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரியாக படிக்கவில்லை என்று தந்தை திட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

