லாரி மோதி முதியவர் பலி
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீழக்குன்னப்பட்டியைச் சேர்ந்தவர் திருப்பதி (வயது 68). இவர் தனது மொபட்டில் துறையூர் – பெரம்பலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி திருப்பதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் புகழேந்தி துறையூர் போலீசில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் முத்துசாமி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் தற்கொலை..
திருச்சி லால்குடி அருகே உள்ள கீழ அன்பில் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 29). இவர் ஆடு வளர்த்து வந்தார். தான் வளர்த்த ஆடு மீது பால்ராஜ் மிகுந்த பாசம் வைத்திருந்தார்.அந்த ஆடு திடீரென உயிரிழந்தது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த பால்ராஜ், மங்கம்மாள்புரம் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை வீராசாமி லால்குடி போலீசில் புகார் அளித்தார் அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா விற்ற மூதாட்டி உள்பட 2 பேர் கைது
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், திருவெறும்பூர் மற்றும் ராமஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மலைப்பட்டி பகுதியில் கஞ்சா விற்ற ராம்ஜிநகர் கள்ளிக்குடி பகுதியை சேர்ந்த முகேஷ் (52) என்பவரை கைது செய்த திருவெறும்பூர் போலீசார், அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல், ராமஜிநகர் நியூ காட்டூர் அருகே கஞ்சா விற்ற ராம்ஜிநகர் மில் காலனியை சேர்ந்த சின்னப்பொண்ணு (77) என்ற மூதாட்டியை போலீசார் கைது செய்து 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற 2 பேர் பிடிபட்டனர்
திருச்சி முசிறி மற்றும் துறையூர் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதாக முசிரி துலையாநத்தம் கவுண்டர் தெருவை சேர்ந்த கிருஷ்ணசாமி (45) என்பவர் தனது வீட்டில் ஹான்ஸ் புகையிலை விற்றபோது கைது செய்யப்பட்டார். இதேபோல், துறையூர்
பகுதியில் புகையிலை விற்ற விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சித்தையா (40) என்பவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி அருகே பணத் தகராறில் கத்திக்குத்து.. 2 பேர் மீது வழக்கு
திருச்சி, லால்குடி தாலுகா மருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அங்குராஜ் (வயது 49). இவரது மனைவி மாலதி, அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்கிற பிரபுவின் மனைவியிடம் மகளிர் சுயஉதவி குழு மூலம் கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த கடனுக்கான தவணைத் தொகையை செலுத்துவதில் இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், மருதூர் சிவன் கோவில் அருகே அங்குராஜ் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சந்திரசேகர் (31) மற்றும் கீர்த்திக்ராஜ் (24) ஆகிய இருவரும் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த இருவரும் அங்குராஜை தகாத வார்த்தைகளால் திட்டி, கத்தியால் குத்தினர்.
இதில் இடது தோள்பட்டையில் பலத்த காயமடைந்த அங்குராஜ், இருங்கலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சமயபுரம் போலீசார் சந்திரசேகர் மற்றும் கீர்த்திக்ராஜ் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
